இந்தியா குறித்து பைடன் விமர்சனம்: ஜெய்சங்கர் பதிலடி
இந்தியா குறித்து பைடன் விமர்சனம்: ஜெய்சங்கர் பதிலடி
ADDED : மே 04, 2024 03:50 PM

புதுடில்லி: இந்தியாவில் அன்னியர்கள் மீது வெறுப்பு அதிகமாகி உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய கருத்தை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார். '' இந்திய சமூகம் எப்போதும் பிற சமூக மக்களுக்கு கதவைத் திறந்தே வைத்துள்ளது'' என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன், '' புலம்பெயர்ந்தவர்களால் அமெரிக்க பொருளாதாரம் வளர்கிறது. சீனா பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது ஏன்? ஜப்பான் பொருளாதாரம் தள்ளாடுவது ஏன்? ரஷ்யாவும், இந்தியாவும் தடுமாறுவது ஏன்? அந்நாடுகள் அன்னியர்களை வெறுக்கிறது. இதனால், அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது'' என விமர்சனம் செய்து இருந்தார்.
தனித்துவமான நாடு
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா எப்போதுமே ஒரு தனித்துவமான நாடு. உலக வரலாற்றிலேயே பல்வேறு சமூகங்களை இந்தியா திறந்த மனதுடன் வரவேற்றிருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம்
பல்வேறு சமூகங்களில் உள்ள பல்வேறு மக்களும் இந்தியா வந்துள்ளனர். அதனால் தான் எங்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது. இதன் மூலம் சிக்கலில் உள்ள மக்களுக்கு இந்தியாவின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.