இட ஒதுக்கீட்டை உயர்த்திய பீஹார் சட்ட திருத்தம்... செல்லாது! நிதீஷ் குமார் அரசின் முடிவுக்கு ஐகோர்ட் தடை
இட ஒதுக்கீட்டை உயர்த்திய பீஹார் சட்ட திருத்தம்... செல்லாது! நிதீஷ் குமார் அரசின் முடிவுக்கு ஐகோர்ட் தடை
ADDED : ஜூன் 21, 2024 01:40 AM
பாட்னா பீஹாரில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை, 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தி, நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு கடந்த ஆண்டு சட்டசபையில் இயற்றிய சட்ட திருத்தத்தை, பாட்னா உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணியில் நிதீஷ் குமார் அங்கம் வகித்தபோது, பீஹாரில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கடந்த ஆண்டு அக்., 2ல் முடிவு வெளியானது.
அரசு கோரிக்கை
அதில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் இ.பி.சி., எனப்படும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பீஹாரில் 63 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் விகிதம், 21 சதவீதமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை, 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தி பீஹார் சட்டசபையில் கடந்த ஆண்டு நவம்பரில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஏற்கனவே 10 சதவீத இடஒதுக்கீடு இருப்பதையடுத்து, பொதுப் பிரிவினருக்கான ஒதுக்கீடு 25 சதவீதமாக குறைந்தது.
இந்த சட்டத்திருத்தத்தை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும்படி மத்திய அரசுக்கு பீஹார் அரசு கோரிக்கை விடுத்தது. அவ்வாறு சேர்க்கப்பட்டால், அந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முடியாது.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை, 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தக்கூடாது என, 1992ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பீஹார் அரசின் இந்த சட்டத்திருத்தம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பாட்னா உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி வினோத் சந்திரன், ஹரீஷ் குமார் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
அதன் விபரம்:
எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் போதிய பிரதிநிதித்துவம் இருக்கும் நிலையில், அதை உயர்த்துவதற்கு சரியான காரணங்கள் இல்லை. எனவே, அதை அனுமதிக்க முடியாது.
இட ஒதுக்கீட்டின் சதவீதத்தை மறுபரிசீலனை செய்வதில், ஓ.பி.சி., மற்றும் இ.பி.சி.,யில் உள்ள எந்தெந்த சமூகங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் உள்ளது என்றும், அவர்களில் யார் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்பதையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
அப்போது தான், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்ட உறுதியான நடவடிக்கை மற்றும் நலத் திட்டங்களின் பலன்களை, கடந்த ஆண்டுகளில் எந்த சமூகத்தினர் அதிகம் பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நிபுணர் குழு
தற்போதுள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டை, 65 சதவீதமாக உயர்த்த பீஹார் ஒன்றும் தொலைதுார பகுதியல்ல.
நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில் அறிவியல்பூர்வமான பகுப்பாய்வு இல்லை. சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவும் நியமிக்கப்படவில்லை.
அப்படிப்பட்ட முயற்சிகளை அரசு மேற்கொள்ளாதது கவலை அளிக்கிறது. எனவே, சட்டசபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக பீஹார் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.