இருவரை ஏமாற்றி 3வது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பீஹார் வாலிபர்
இருவரை ஏமாற்றி 3வது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பீஹார் வாலிபர்
ADDED : ஜூலை 15, 2024 04:35 AM

நெலமங்களா : ஏற்கனவே, இரண்டு பெண்களுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்த பீஹாரை சேர்ந்த வாலிபர், அவர்களை ஏமாற்றி விட்டு, மூன்றாவது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம், பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரு பீன்யா அருகில் உள்ள நெலகதரனஹள்ளியில் வசித்தவர் சோனுகுமார், 34. பீஹாரை சேர்ந்த இவர், வேலை தேடி, சில ஆண்டுகளுக்கு முன், பெங்களூரு வந்தார். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். விவகாரத்து ஆன ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.
காதலிப்பதாக கூறி அவருடன் நெருக்கமாக பழகி, தன் ஆசைக்கு சம்மதிக்க வைத்துள்ளார். சில மாதங்கள் அவருடன் வாழ்ந்து விட்டு, பின் அவரை விட்டு விட்டு தலைமறைவாகி உள்ளார். பின், பீன்யாவை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். அவருடன் வசித்து வந்துள்ளார்.
'லிவிங் டு கெதர்' பாணியில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்துள்ளார்.
சமீபத்தில், அவரிடம் இருந்த 3.60 லட்சம் ரூபாயை திருடி கொண்டு, தப்பியோடி விட்டார். இது தொடர்பாக பீன்யா போலீஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண், புகார் செய்திருந்தார். இரண்டு பெண்களை ஏமாற்றியவர், தன் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
இதற்கிடையில், மூன்றாவதாக நெலமங்களாவை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி, அவரை தன் வலைக்குள் விழ வைத்துள்ளார். நேற்று முன்தினம், அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆனால், இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறி, மாலை மாற்றி கொண்ட படங்களை உறவினர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இது தொடர்பாக, அந்த பெண்ணின் பெற்றோர், போலீசில் புகார் செய்துள்ளனர். பீன்யா போலீசார் விசாரிக்கின்றனர்.

