பெண்கள் பாதுகாப்புக்கு அதிகாரிகள் 140 பேரை நியமிக்க பீஹார் முடிவு
பெண்கள் பாதுகாப்புக்கு அதிகாரிகள் 140 பேரை நியமிக்க பீஹார் முடிவு
ADDED : பிப் 23, 2025 11:50 PM

பாட்னா,: -குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் பாதுகாப்புக்காக, 140 அதிகாரிகளை நியமிப்பதாக பீஹார் அரசு அறிவித்துள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமானவை குடும்ப வன்முறை வழக்குகள்.
எனவே, மாநிலம் முழுதும் சமூக நலத்துறை சார்பில், 140 சிறப்பு 'பெண்கள் பாதுகாப்பு அதிகாரி'களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. மாவட்ட வாரியாகவும், சப் - டிவிஷன்கள் வாரியாகவும் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து, அறிக்கையை பெறுவது; குடும்ப வன்முறை வழக்குகளில் நீதிமன்றத்துக்கு தேவையான ஆதாரங்களை திரட்டித் தருவது போன்ற பணிகளை, 24 மணி நேரமும் இந்த பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்வர்.
பீஹாரில் குடும்ப வன்முறை, பொது இடங்களில் வன்முறைக்குள்ளாகும் பெண்களுக்கு உதவுவதற்காக ஏற்கனவே, 'ஒன் ஸ்டாப் சென்டர்' எனப்படும் ஒரே இடத்தில் தீர்வு காணும் மையங்கள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படும் 38 மையங்களை, 50 வரை அதிகரிக்கவும் பீஹார் அரசு முடிவு செய்துள்ளது.

