அரசு வேலை, 12 லட்சம் பேருக்கு: ஆட்சியை காக்கும் வழி, நிதீஷ் குமாருக்கு!
அரசு வேலை, 12 லட்சம் பேருக்கு: ஆட்சியை காக்கும் வழி, நிதீஷ் குமாருக்கு!
ADDED : ஆக 16, 2024 10:37 AM

பாட்னா: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, இப்போதே தேர்தல் வேலையை முதல்வர் நிதீஷ் குமார் துவக்கிவிட்டார். தற்போது, அவர் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
மொத்தம், 243 எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள பீஹார் சட்டசபை, வரும் 2025ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் சட்டசபையில் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க நிதீஷ் குமார் களத்தில் இறங்கியுள்ளார். தற்போது அவர் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
இளைஞர்கள்
அவர் கூறியதாவது: கடந்த தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தனது அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி படி, 5.16 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடந்து முடிந்துள்ளன. வரும் சட்டசபை தேர்தலுக்குள், 10 லட்சத்திற்கு பதிலாக 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க பீஹார் அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு நிதீஷ் குமார் கூறினார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, இளைஞர்களின் ஓட்டை கவரும் முயற்சியில் நிதீஷ் குமார் களத்தில் இறங்கியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

