ADDED : ஜூலை 30, 2024 01:09 AM
புதுடில்லி, பீஹாரில், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை, 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தி, கடந்த ஆண்டு நவம்பரில் மாநில அரசு உத்தரவிட்டது.
அப்போது பீஹாரில், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய, 'மகாகட்பந்தன்' கூட்டணி ஆட்சி இருந்தது.
கடந்த ஜனவரியில் அக்கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், பா.ஜ.,வுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார்.
இதற்கிடையே, இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 20ல், பீஹார் அரசின் உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பீஹார் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பீஹார் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
