ADDED : ஏப் 16, 2024 05:31 AM
பெங்களூரு, : பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகி, 29. கடந்த 2020 ல் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சா விற்ற வழக்கில், கே.ஜி.நகர் போலீசார் கைது செய்தனர். பிட்காயின் முறைகேடு வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது.
இதன் பின்னர் வழக்கு சி.சி.பி.,க்கு மாற்றப்பட்டது. பிட்காயின் முறைகேட்டில் பா.ஜ., தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பிட்காயின் முறைகேடு வழக்கை விசாரிக்க, கடந்த ஆண்டு ஜூலை 3 ம் தேதி, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கைது
இந்த குழுவினர் நடத்திய விசாரணையில் சி.சி.பி., போலீசார் சிலர், தடயங்களை அழிக்கும் நோக்கில், பிட்காயின்களை சேதப்படுத்தியது தெரிந்தது. அவர்கள் மீது காட்டன்பேட் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஸ்ரீகியிடம் விசாரணை நடத்திய, சி.சி.பி., முன்னாள் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் பாபு, சைபர் நிபுணர் சந்தோஷ்குமார் ஆகியோர், ஸ்ரீகிருஷ்ணா என்பவர் மூலம் பிட்காயின்களை மாற்றி, தங்களது வங்கிக்கணக்கிற்கு பணம் பெற்றது தெரிந்தது. இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிட்காயின் முறைகேடு வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைத்து 10 மாதங்கள் ஆகியும், வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதன் மூலம் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
ஆதாரம் இல்லை
இதுகுறித்து எஸ்.ஐ.டி., அதிகாரி கூறுகையில், 'ஸ்ரீகிருஷ்ணா மூலம் 5,000 பிட்காயின்கள் மாற்றப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. இதன் மதிப்பு 2,956 கோடி ரூபாயாக இருக்கலாம். பணம் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக தகவல் உள்ளது.
'ஆனால் ஆதாரம் இல்லை. பிட்காயின் பரிவர்த்தனை இயக்கும் 25 க்கும் மேற்பட்ட, சர்வதேச நிறுவனங்கள் உதவி கேட்டு கடிதம் எழுதினோம். இதுவரை அந்த நிறுவனங்களிடம் இருந்து, எந்த பதிலும் இல்லை. ஆனாலும் எங்களிடம் இருக்கும் தகவலை வைத்து, விசாரணை தொடந்து நடக்கும்' என்றார்.

