பா.ஜ., - ம.ஜ.த., விரைவில் இணைப்பு அமைச்சர் செலுவராயசாமி எதிர்பார்ப்பு
பா.ஜ., - ம.ஜ.த., விரைவில் இணைப்பு அமைச்சர் செலுவராயசாமி எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 22, 2024 04:38 AM

பெங்களூரு : ''பா.ஜ.,வில் விரைவில் ம.ஜ.த., இணையும் என சிலர் கூறியுள்ளனர்,'' என விவசாயத் துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்து போட்டியிட்டன. விரைவில் ம.ஜ.த., பா.ஜ.,வில் இணையும் என, சிலர் என்னிடம் கூறினர்.
கர்நாடகாவில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. காங்., வேட்பாளர்கள் தேர்வுக்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ், தொகுதியில் நற்பணிகளை செய்துள்ளார்.
அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாநில காங்., தலைவராக சிவகுமார் இருப்பதால், அவரே சரியான முடிவை எடுப்பார்.
நற்பணிகள்
சென்னபட்டணா இடைத்தேர்தலில், காங்கிரஸ் அரசு செய்த வளர்ச்சி பணிகள், வாக்குறுதி திட்டங்களை முன்வைத்து மக்களிடம் ஓட்டு கேட்போம். இத்தொகுதிக்கு, யார் வேட்பாளர் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, முதல்வரும், தேசிய தலைவரும் முடிவு செய்வர். 'ஹைவோல்டேஜ்' தொகுதி என்பதால், முன்கூட்டியே வேட்பாளரை அறிவிக்க முடியாது.
லோக்சபா தேர்தலில், இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 85,000 ஓட்டுகள் கிடைத்தன. சிவகுமாரின் தலைமையால், இந்த அளவுக்கு ஓட்டுகளை பெற முடிந்தது.
யோகேஸ்வர் கனவு
சென்னபட்டணாவில் போட்டியிட்டால் துணை முதல்வர் சிவகுமாரின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிடும் என்று, முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் கூறியுள்ளார்.
அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இல்லை. நீண்ட நாட்களாக அவர் கனவு காண்கிறார். தொகுதியில் போட்டியிட, தனக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி வாய்ப்பளிக்கலாம் என, கருதுகிறார்.
ஆனால் குமாரசாமி, தன் மகனுக்கு சீட் அளிக்க விரும்புகிறார். யாருக்கு சீட் கொடுக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அவர்கள் கட்சி முடிவை, அவர்களே எடுக்கட்டும்.
ம.ஜ.த.,வில் எதிர்காலத்தில் ஏதாவது பெரிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, காங்கிரஸ் அரசை விமர்சித்து பேசி வருகிறார். அவர் அமைச்சராக இருந்த போது எப்படி நடந்து கொண்டார் என்று எங்களுக்கு தெரியும்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, போராட்டம் நடத்த பா.ஜ.,வுக்கு அருகதை இல்லை. இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில், பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு என்பதை, மக்கள் கவனிக்க வேண்டும்.
ஆட்சி நடத்துவோர், வரி வசூலிக்க வேண்டாமா. விலையை குறைக்கும்படி வலியுறுத்தி, மத்திய அரசை வலியுறுத்தி பா.ஜ.,வின், 17 எம்.பி.,க்களும் போராட்டம் நடத்தட்டும். வரி உயர்வு சகஜம். ஆனால் மக்களுக்கு சுமையாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.