காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆலோசனை
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : ஏப் 05, 2024 11:15 PM

பெங்களூரு: பெங்களூரு வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் ஆதரவாளர்களுடன், ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு யஷ்வந்த்பூர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். பா.ஜ., தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மீண்டும் காங்கிரஸ் பக்கம் தாவ நினைக்கிறார். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதிக்கு உட்பட்டு, யஷ்வந்த்பூர் தொகுதி வருகிறது. பெங்களூரு வடக்கில் பா.ஜ., வேட்பாளராக, மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார்.
எனக்கு அவமானம்
காங்கிரஸ் சார்பில் ராஜீவ் கவுடா களத்தில் உள்ளார். இந்நிலையில் கெங்கேரியில் உள்ள திருமண மண்டபத்தில், ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ., சோமசேகர் நேற்று ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க, திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்பின் சோமசேகர் அளித்த பேட்டி:
பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் ஷோபா, இதுவரை என்னை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை. என்னை தொடர்ந்து அவமதித்து வருகிறார். இதனால் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். எனக்கு நடக்கும் அவமானம் பற்றி கூறினேன். ஆதரவாளர்களும், தொகுதி மக்களும் தான் எனக்கு மேலிடம்.
'கோ பேக்' பிரசாரம்
உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் ஷோபா போட்டியிட எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக 'கோ பேக்' பிரசாரம் நடந்தது. பெங்களூரு வடக்கு மக்கள் அவருக்கு வரவேற்பு தர வேண்டுமா. எனது தொகுதியில் பிரச்னையை கிளம்பிவிடும் வேலையில், ஷோபா ஈடுபட்டு உள்ளார்.
சந்திரேகவுடா, சதானந்த கவுடா பா.ஜ., - எம்.பி.,க்களாக இருந்த போது, எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. உங்களுக்காக யார் வேலை செய்வர் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று, எனது தொகுதி மக்களிடம் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

