சொந்த கட்சிக்கு குழி பறிக்கும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள்; சகோதரர் மகள் வெற்றிக்காக பிரசாரத்தில் 'ஆப்சென்ட்'
சொந்த கட்சிக்கு குழி பறிக்கும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள்; சகோதரர் மகள் வெற்றிக்காக பிரசாரத்தில் 'ஆப்சென்ட்'
ADDED : ஏப் 30, 2024 10:26 PM

சிக்கோடி கோட்டையை மீண்டும் காங்கிரஸ் வசமாக்க, தனது மகளை களமிறக்கி, அக்கட்சியின் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளையில், தொகுதியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ., முயற்சித்து வருகிறது.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், சிக்கோடி லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள நிப்பானி, ராய்பக் - தனி, ஹூக்கேரி ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.,வும்; சிக்கோடி - சடல்கா, அதானி, காகவாட், குடச்சி - தனி, எம்கன்மர்டி - எஸ்.டி., ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 1962ல் காங்கிரசின் வி.எல்.பாட்டீல்; 1967 முதல் தொடர்ந்து எட்டு முறை காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் சங்கரானந்தா வெற்றி பெற்றிருந்தார். 1996ல் ஜனதா தளம், 1998ல் லோக் சக்தி; 1999ல் ஜனதா தளம்; 2004, 2009ல் பா.ஜ.; 2014ல் காங்.; 2019ல் பா.ஜ., வெற்றி பெற்றது.
பிரசாரம் புறக்கணிப்பு
இத்தொகுதியில் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக லிங்காயத் சமுதாயத்தினர் உள்ளனர். இத்தொகுதியில் தற்போதைய பா.ஜ., - எம்.பி., அன்னாசாப் ஜொல்லே மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா, 27, போட்டியிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அலையால் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அன்னாசாப் ஜொல்லேவும்; தந்தையின் அரசியல் செல்வாக்கு, குடும்பத்தினர் ஒத்துழைப்பில் பிரியங்காவும் களத்தில் உள்ளார்.
இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி., ரமேஷ் கத்தி 'சீட்' கேட்டிருந்தார். ஆனால் கட்சி மேலிடம் மறுத்ததால், அதிருப்தியில் உள்ள அவர், வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல் தவிர்த்து வருகிறார்.
லிங்காயத் சமுதாயத்தின் முக்கிய தலைவரான ராஜ்யசபா முன்னாள் எம்.பி., பிரபாகர் கோரே, தனது மகனுக்கு சீட் கேட்டும் அவருக்கும் தரவில்லை.
ஓய்வு அதிகாரி
பா.ஜ.,வில் உள்ள ஜார்கிஹோளி சகோதரர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தும், இத்தொகுதியில் பிரசாரம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இது பா.ஜ.,வுக்கு பெரிய அடியாகவே கருதப்படுகிறது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷம்பு கல்லோலிகர், கடந்தாண்டு ராய்பக் - தனி சட்டசபை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு தரப்படவில்லை. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டு, 54,000 ஓட்டுகள் பெற்றார்.
ஆனால், பா.ஜ.,வின் துரியோதன் அய்ஹோலே, 2,631 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தலித் சமுதாயத்தை சேர்ந்த ஷம்பு கல்லோலிகர், லோக்சபா தேர்தலில் இங்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால், காங்கிரசுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியாது.
கடந்த 2014ல் மோடி அலை இருந்தும், காங்கிரசின் பிரகாஷ் ஹூக்கேரி வெற்றி பெற்றார். ஆனால் 2019ல் தொகுதியை இழந்த காங்கிரஸ், இம்முறை இளம் வேட்பாளராக பிரியங்காவை களம் இறக்கி உள்ளது.
இத்தொகுதியில் லிங்காயத் சமுதாயத்தினர் 4.10 லட்சம்; குருபா 1.70 லட்சம்; எஸ்.சி., 1.45 லட்சம்; எஸ்.டி., 90,000; முஸ்லிம் 1.80 லட்சம்; மராத்தியர் 1.70 லட்சம்; ஜெயின் 1.30 லட்சம் மற்றும் இதர சமுதாயத்தினர் என, மொத்தம் 17.41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மகள் பிரியங்காவை வெற்றி பெற வைக்க, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களான தனது சகோதரர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பாலசந்திர ஜார்கிஹோளியை சந்தித்து சதீஷ் ஜார்கிஹோளி பேசியுள்ளார்.
அவர்களும், தன் சகோதரர் மகளுக்கு எதிராக தேர்தல் பணி செய்யாமல், பக்கத்து தொகுதியான பெலகாவிக்கு சென்று விட்டனர். அங்கு, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாளை தோற்கடித்து, பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற செய்வதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
பா.ஜ.,வின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பெலகாவியில் இருப்பதால், தனித்து விடப்பட்டதாக கருதிய அன்னாசாப் ஜொல்லேவுக்கு ஆதரவாக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். இதனால் உற்சாகமடைந்த அன்னாசாப் ஜொல்லே, தொகுதியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
- நமது நிருபர் -