பா.ஜ., - எம்.எல்.சி., பதவி தேஜஸ்வினி கவுடா ராஜினாமா
பா.ஜ., - எம்.எல்.சி., பதவி தேஜஸ்வினி கவுடா ராஜினாமா
ADDED : மார் 28, 2024 03:41 AM

பெங்களூரு : லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் போட்டியிட பா.ஜ.,வில், 'சீட்' கிடைக்காததால், எம்.எல்.சி., பதவியை, தேஜஸ்வினி கவுடா ராஜினாமா செய்து உள்ளார். அவர் காங்கிரசில் இணையலாம் என்று, தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்ட மேலவையில் ம.ஜ.த., - எம்.எல்.சி.,யாக இருந்தவர் மரிதிப்பேகவுடா. இவர் கடந்த 21ம் தேதி எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்தார். பின் காங்கிரசில் இணைந்தார். இன்னும் ஓரிரு நாட்களில் இன்னொரு எம்.எல்.சி., ராஜினாமா செய்ய போவதாக, சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறி இருந்தார்.
அதன்படி பா.ஜ., - எம்.எல்.சி., தேஜஸ்வினி கவுடா, 57 தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை, சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம் கொடுத்தார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
தேஜஸ்வினி கவுடாவின் பதவிக்காலம் ஜூன் 17ம் தேதி முடிவடையும் நிலையில் இருந்தது. அதற்குள் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளார்.
தேஜஸ்வினி கவுடா பா.ஜ.,வில் இணைவதற்கு முன்பு, காங்கிரசில் இருந்தவர். 2004 லோக்சபா தேர்தலில், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை தோற்கடித்தார். இதன்மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். ஆனால், 2009 லோக்சபா தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கடந்த 2014ல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். 2018 முதல் பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்தார்.
லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் பிரதாப் சிம்ஹாவுக்கு, சீட் கிடைக்காது என்று தகவல் உலா வந்ததும், ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த தனக்கு சீட் தர வேண்டும் என்று, பா.ஜ., மேலிடத்திற்கு தேஜஸ்வினி கவுடா கோரிக்கை வைத்தார்.
ஆனால், மன்னர் குடும்பத்தின் யதுவீருக்கு சீட் கிடைத்ததால், அதிருப்தி அடைந்தார். இதனால் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்திருப்பது தெரியவந்து உள்ளது. தாய் கட்சியான காங்கிரசில், அவர் இணையலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.