'மத ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தும் இண்டியா கூட்டணி'; பா.ஜ., குற்றச்சாட்டு
'மத ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தும் இண்டியா கூட்டணி'; பா.ஜ., குற்றச்சாட்டு
UPDATED : ஏப் 13, 2024 04:03 AM
ADDED : ஏப் 13, 2024 01:53 AM

புதுடில்லி, 'நாட்டை மத ரீதியில் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் இண்டியா கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்' என பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசை வீழ்த்த முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து 'இண்டியா' கூட்டணியை உருவாக்கின.
இதில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறியதாவது:
இண்டியா கூட்டணியில் உள்ளவர்களை ஊழல் பசை கட்டிப்போடுகிறது. அதில் உள்ள காங்கிரஸ், ஊழல் செய்வதை கொள்கையாக வைத்துஉள்ளது.
அக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அதில் அங்கம் வகித்த தி.மு.க., 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டது. அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான ராஜா மீது இந்த ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
இதில், முறைகேடு எதுவும் இல்லை என இரு கட்சிகளும் கூறினாலும், ஊழல் காரணமாகவே அப்போது வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த விவகாரத்தில் டில்லி உயர் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை நிச்சயம் வழங்கும்.
வஞ்சகம், முறைகேடு, கெடுபிடிகள் நிறைந்த தி.மு.க., மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த செந்தில்பாலாஜி ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். அதேபோல் தி.மு.க.,வைச் சேர்ந்த உதயநிதி, ராஜா போன்றோர் சனாதன தர்மத்துக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.
அப்போதும், அவர்களுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மவுனமாகவே உள்ளது. இந்த இரு கட்சிகளும் நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். மறுபுறம் பிரதமர் மோடியோ, ஊழலை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். தமிழகத்தை இந்தியாவின் பெருமை என கூறி வருகிறார்.
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக, அரசிய லமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று சம்பிரதாய சடங்குகளை மேற்கொண்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

