ADDED : ஜூன் 19, 2024 05:24 AM
லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடக அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி மேலும் வலுவடைகிறது. இது பா.ஜ.,வில் சில தலைவர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.
கடந்த 2023ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றி போல லோக்சபா தேர்தலிலும் தொடர வேண்டும் என, காங்கிரஸ் திட்டமிட்டது.
இதைத் தடுக்கும் நோக்கில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொண்டன. லோக்சபா தேர்தலில், கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
மாண்டியாவில் வெற்றி பெற்ற குமாரசாமி, தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், கனரக தொழில் துறை அமைச்சராக உள்ளார். இதனால் ம.ஜ.த., தொண்டர்கள், தலைவர்கள் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்ததை, தேர்தல் முடிவு உணர்த்தியது.
இரண்டு கட்சிகளின் கூட்டணி, மேலவை தேர்தலிலும் தொடர்ந்தது. பெங்களூரு மாநகராட்சி தேர்தல், மாவட்ட, தாலுகா தேர்தலிலும் கூட்டணி நீட்டிக்க, இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
நடப்பாண்டு இறுதியில், பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலில், பெங்களூரின் நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பா.ஜ., மாநகராட்சி தேர்தலிலும், காங்கிரசை தோற்கடித்து துணை முதல்வர் சிவகுமாருக்கு பின்னடைவை ஏற்படுத்த திட்டம் வகுத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடர வேண்டும் என, இரண்டு கட்சிகளின் எம்.பி.,க்களும் விரும்புகின்றனர். இதுகுறித்து, கட்சி மேலிடத்திடமும் ஆலோசனை கூறியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் முடிந்த பின், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி முடிவுக்கு வரும் என, காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் கூட்டணி தொடர்வதுடன், நாளுக்கு நாள் வலுவடைவதால் அக்கட்சி தலைவர்கள் சிலர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
காங்கிரசுக்கு மட்டுமின்றி, பா.ஜ.,வின் சில தலைவர்களின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது. ம.ஜ.த., கூட்டணியால், எதிர்காலத்தில் கட்சியில் தங்களின் செல்வாக்கு சரியும்; ம.ஜ.த.,வினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என, பா.ஜ.,வின் சில தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
குறிப்பாக ஒக்கலிகர் தலைவர்களுக்கு இந்த பயம் உள்ளது. தங்களுக்கு சீட் பெற, அதிகம் போராட வேண்டி வருமோ என, அஞ்சுகின்றனர்.

