-முதல்வர் போல பேச்சு இல்லை பகவந்த் மான் மீது பா.ஜ., தாக்கு
-முதல்வர் போல பேச்சு இல்லை பகவந்த் மான் மீது பா.ஜ., தாக்கு
ADDED : ஜூலை 14, 2025 03:22 AM

சண்டிகர்:''பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து, பகவந்த் மான் பேசும் மொழி, அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழகல்ல; இதே பாணியில் தொடந்தால், அதே மொழியில் அவருக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்,'' என, பஞ்சாப் மாநில பா.ஜ., செயல் தலைவராகப் பொறுப்பெற்றுள்ள அஸ்வனி சர்மா கூறினார்.
பஞ்சாப் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ள பதான்கோட் பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வனி சர்மா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த முதல்வர் பகவந்த் மான் கருத்து தெரிவித்து பேசிய மொழியில் நாகரிகம் இல்லை. அவர் பேசும் மொழி அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழக்கல்ல.
தொடர்ந்து அவர், இதேபோல, நாகரிகம் இல்லாமல் பேசினால், அதே மொழியில் அவருக்கு பதில் கிடைக்கும்.
பஞ்சாபில், மூன்று ஆண்டுகளாக அரசு இயங்கவில்லை. ஒரு சர்க்கஸ்தான் நடக்கிறது. முதல்வர் பகவந்த் மான் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
அரசியலில், ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு தனிநபரும் தங்கள் கருத்துக்களை மக்கள் முன் பேசுகின்றனர். அரசியல் என்பது சித்தாந்தப் போராட்டம். தனிப்பட்ட போட்டி அல்லது பகை இதில் இருக்கக் கூடாது. பகவந்த் மானின் தந்தை ஆசிரியர் பணி புரிந்தவர்.
ஆனால், ஆசிரியரின் மகன் போல பகவந்த் மான் நடத்தை இல்லை.
நாட்டின் பிரதமர் என்பவர் தனிநபர் மட்டுமல்ல; நாட்டின் மரியாதைக்குரியவர். அதேபோல, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து, நாகரிகம் அற்ற முறையில் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் மாநில செயல் தலைவராக அஸ்வனி சர்மா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாநில பா.ஜ., தலைவர் சுனில் ஜாக்கர், மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, மூத்த தலைவர்கள் மன்பிரீத் பாதல், மனோரஞ்சன் காலியா மற்றும் பிரனீத் கவுர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.