'எம்.பி.,யான ஆறு மாதத்தில் ஹிந்தி கற்பேன்' காங்கிரசுக்கு பா.ஜ., வேட்பாளர் பூஜாரி பதிலடி
'எம்.பி.,யான ஆறு மாதத்தில் ஹிந்தி கற்பேன்' காங்கிரசுக்கு பா.ஜ., வேட்பாளர் பூஜாரி பதிலடி
ADDED : மார் 23, 2024 11:02 PM

'பா.ஜ., வேட்பாளர் கோட்டா சீனிவாச பூஜாரிக்கு, ஹிந்தி, ஆங்கிலம் தெரியாது. அவருக்கு ஓட்டு போடாதீர்கள்' என காங்., வேட்பாளர் ஜெயபிரகாஷ் ஹெக்டே அழைப்பு விடுத்து, சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவருக்கு கோட்டா சீனிவாச பூஜாரி பதிலடி கொடுத்தார்.
உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதி எம்.பி.,யான ஷோபா, இம்முறையும் இதே தொகுதியில் சீட் எதிர்பார்த்தார். ஆனால் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இவரை பெங்களூரு வடக்கில் களமிறக்கிய பா.ஜ., மேலிடம், உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில், கோட்டா சீனிவாச பூஜாரிக்கு 'சீட்' கொடுத்துள்ளது.
இவரை எதிர்த்து ஜெயபிரகாஷ் ஹெக்டே, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணைய தலைவராக இருந்த இவர், தன் பதவி காலம் முடியும் நிலையில், அரசுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்தவர்.
உடுப்பி - சிக்கமகளூரில் பா.ஜ., வேட்பாளர் மாறியதால், இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் காங்கிரஸ் இவரையே வேட்பாளராக்கியது.
தொகுதியில் பிரசாரம் செய்யும் ஜெயபிரகாஷ் ஹெக்டே, 'கோட்டா சீனிவாச பூஜாரிக்கு, ஹிந்தியும், ஆங்கிலமும் தெரியாது. எம்.பி., பதவி வகிப்பவர், மத்திய அரசு அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் பேச வேண்டி வரும்.
ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரியாமல், லோக்சபாவில் பேசுவது கஷ்டம். அலுவலகத்திலும் பணியாற்ற முடியாது. மொழி பெயர்ப்போருக்கு அனுமதி இருக்காது. பூஜாரிக்கு, கன்னடத்தை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அவரை தேர்வு செய்தால், டில்லியில் வேலை நடக்காது. எனவே அவருக்கு ஓட்டு போடாதீர்கள்' என கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. இவரது பேச்சு சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. உடுப்பி - சிக்கமகளூரு எம்.பி.,யான ஷோபா, குறுகிய காலத்தில் ஹிந்தி கற்று, லோக்சபாவில் பேசி பாராட்டு வாங்கியதை, ஜெயபிரகாஷ் ஹெக்டே மறந்துவிட்டாரா என, பலரும் கேள்வி எழுப்பினர்.
இவருக்கு பதிலடி கொடுத்து, கோட்டா சீனிவாச பூஜாரி கூறியதாவது:
நான் எம்.பி.,யான ஆறு மாதங்களில், ஹிந்தி மொழியை கற்று காண்பிப்பேன். மொழி என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமே. என் தாய் மொழி கன்னடம். எனக்கு நன்றாக தெரியும்.
மொழி பிரச்னை ஏற்படும் என்ற சந்தேகம், வாக்காளர்களுக்கு வேண்டாம். நான் எம்.பி.,யான ஆறே மாதங்களில், ஹிந்தியில் பேசி ஜெயபிரகாஷ் ஹெக்டேவை மகிழ்விப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

