பிரதமர் மோடி வருகையால் உற்சாகம் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா 'குஷி'
பிரதமர் மோடி வருகையால் உற்சாகம் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா 'குஷி'
ADDED : மே 03, 2024 07:12 AM

ஷிவமொகா: ''பிரதமர் நரேந்திர மோடியின் ஊர்வலம், தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. என் வெற்றி உறுதி,'' என பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா தெரிவித்தார்.
ஷிவமொகா லோக்சபா தொகுதியில், இரண்டு பிரபலமான குடும்பங்கள் இடையே, அரசியல் ரீதியான மோதல் உள்ளது.
இம்முறை லோக்சபா தேர்தலில், ஷிவமொகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் கீதா சிவராஜ்குமார் களமிறங்கி உள்ளனர். தொகுதியை கைப்பற்ற இரண்டு கட்சிகளும் முயற்சிக்கின்றன.
பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா கூறியதாவது:
தொகுதியில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தியதால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தீவிர பிரசாரம் செய்கிறோம்.
தொகுதியின் பலர் தங்களின் வீடுகளுக்கான உரிமை பத்திரங்களுக்கு காத்திருக்கின்றனர். சராவதி திட்டத்தால் குடியிருப்பை இழந்தோருக்கு, மாற்று குடியிருப்பு வசதி செய்து தரப்படும். முக்கிய பிரச்னைகளுக்கு, மத்திய அரசின் உதவியுடன் தீர்வு காணப்படும்.
கலைஞர்களை நான் மதிக்கிறேன். ஆனால் நடிகர்களின் செல்வாக்கு, ஓட்டுகளாக மாறாது என்பது என் கருத்து. நடிகர்களின் கண்ணோட்டம் மற்றும் பிரச்னைகள் மாறுபட்டதாகும். என்னை பொறுத்த வரை உண்மையான ஹீரோக்கள், வாக்காளர்கள் தான்.
நாட்டின் ஏழை பெண்களுக்கு, ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதாக, காங்கிரசார் அறிவித்துள்ளனர். 32 கோடி ஏழை பெண்கள் இருப்பதாக, கணக்கில் எடுத்து கொண்டாலும், அரசுக்கு 32,000 கோடி ரூபாய் தேவைப்படும். திட்டத்துக்கு பணத்தை எங்கிருந்து கொண்டு வருவர்.
தேசிய அளவில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் அமைக்க முயற்சிப்பேன். தங்கள் ஊர்களில் இணையதளம் வசதி இல்லாததால், இளைஞர்கள் பலரும் ஷிவமொகா நகரில், வாடகை அறைகளில் வசிக்கின்றனர். மொபைல் டவர்கள் பொருத்தினால், இளைஞர்கள் தங்களின் ஊர்களில் வசிகக உதவியாக இருக்கும்.
தீர்த்தஹள்ளியில் 100 ஏக்கரில், ராணுவ பள்ளி அமைக்க திட்டம் வகுத்துள்ளோம். தரமான கல்வியும், வேலை வாய்ப்பும் அளிப்பது, எங்களின் குறிக்கோளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.