ADDED : மே 30, 2024 12:35 AM
கோண்டா :உத்தர பிரதேசத்தில், பா.ஜ., வேட்பாளர் கரண் பூஷண் சிங் காரின் பின்னால், அணிவகுத்து சென்ற மற்றொரு கார் மோதி இருவர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் பா.ஜ.,வின் பிரிஜ் பூஷண் சரண் சிங். மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தார். பெண் வீராங்கனையருக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் சிக்கி, தலைவர் பதவியை இழந்தார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
சர்ச்சையில் சிக்கிய காரணத்தால், பிரிஜ் பூஷணுக்கு இந்த முறை லோக்சபா தேர்தலில் பா.ஜ., சீட்டு வழங்கவில்லை. அவருக்கு பதில், அவரது மகன் கரண் பூஷண் சிங், கைசர்கஞ்ச் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதிக்கு கடந்த 20ம் தேதி தேர்தல் முடிந்தது.
இந்நிலையில், கரண் பூஷண் சிங் நேற்று, கைசர்கஞ்ச் அருகே உள்ள கோண்டா பகுதிக்கு காரில் சென்றார். அவரை பின் தொடர்ந்து நிறைய கார்கள் சென்றன. அதில் கட்டுப்பாட்டை இழந்த, 'டொயோட்டா பார்ச்யூனர்' கார், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது மோதியது. அதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் வேறு காரில் தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கைது செய்யப்பட்ட பின் சமாதானமாக மக்கள் கலைந்து சென்றனர். போலீசார் விசாரணையில், இந்த கார் பிரிஜ் பூஷணுக்கு சொந்தமான நிறுவனத்தின் பேரில் பதியப்பட்டது தெரிந்தது.