கண்காணிப்பு கேமராவில் அரசியல் அரசு மீது ஐகோர்ட்டில் பா.ஜ.., வழக்கு
கண்காணிப்பு கேமராவில் அரசியல் அரசு மீது ஐகோர்ட்டில் பா.ஜ.., வழக்கு
ADDED : ஆக 24, 2024 09:56 PM

புதுடில்லி:'ஆளும் கட்சித் தலைவர்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது' என பா.ஜ., - எம்.எல்.ஏ., டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
கிழக்கு டில்லி லட்சுமி நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., அபய் வர்மா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 2020- - 2021ம் ஆண்டின் பட்ஜெட் உரையில் மாநகர் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்தார். ஆனால், டில்லி பொதுப்பணித் துறையினர் ஆளும் கட்சித் தலைவர்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துகின்றனர். ஆம் ஆத்மி அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது.
லட்சுமி நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன கணக்கெடுப்புப்படி லட்சுமி நகர் சட்டசபை தொகுதியில் 2,066 கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
ஆனால், ஒன்றுகூட பொருத்தவில்லை. இதுகுறித்து, டில்லி அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், இன்னும் பதில் வரவில்லை.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன கணக்கெடுப்புப்படி லட்சுமி நகர் சட்டசபை தொகுதியில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வில் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

