ADDED : ஏப் 16, 2024 01:04 AM
புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் காங்., - எம்.பி., ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., புகார் அளித்துள்ளது.
குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தலுக்கான பிரசாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மீது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆதாரமற்ற வகையில் பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாக தலைமை தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., புகார் அளித்துள்ளது.
அக்கட்சி பொதுச் செயலர் தருண் சுக், செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திவேதி, எம்.பி., ஓம் பதக் உள்ளிட்டோர் அடங்கிய குழு அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவையில் நடந்த கூட்டத்தில் பேசிய காங்., - எம்.பி., ராகுல், பிரதமர் மீது ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டில் ஒரே மொழியை திணிக்க விரும்புவதாக கூறிய அவர், ஆளும் பா.ஜ., அரசு அரசியல் சாசனத்தையே மாற்ற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த பொய்யான குற்றச்சாட்டு வாயிலாக பிரதமரின் மீதான நம்பகத்தன்மைக்கு அவர் களங்கம் விளைவித்துள்ளார்.
இதன் வாயிலாக, தமிழர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மொழி மற்றும் கலாசார பிளவை உருவாக்க முயன்ற ராகுல், தமிழக மக்கள் மனதில் அவருக்கு எதிரான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்.
இது போன்ற அடிப்படையற்ற, ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ள அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

