காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜ., மீண்டும் பாதயாத்திரை
காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜ., மீண்டும் பாதயாத்திரை
ADDED : செப் 05, 2024 05:24 AM

''காங்கிரஸ் அரசின் முறைகேட்டை கண்டித்து, விரைவில் இரண்டாம் கட்ட பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
'மூடா' முறைகேட்டை கண்டித்து, பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து, பெங்களூரில் இருந்து மைசூரு வரை, கடந்த மாதம் பாதயாத்திரை நடத்தினர். இது தேசிய அளவில் பேசப்பட்டது.
இதற்கிடையில், வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டை கண்டித்து, பாதயாத்திரை நடத்த பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா பாட்டீல் எத்னால் உட்பட அதிருப்தியாளர்கள் திட்டமிட்டனர்.
இதற்கு, கட்சி மேலிடமும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களும் தடை விதித்தனர். மாநில தலைவர் விஜயேந்திராவை தவிர்த்து, போராட்டம் நடத்தினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று அறிவுரை கூறினர்.
இந்நிலையில், மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, டில்லியில் நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் அரசின் ஊழலை கண்டித்து, பா.ஜ., ஏற்கனவே பாதயாத்திரை நடத்தி உள்ளது. இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், காங்கிரஸ் அரசுக்கு எதிராக இரண்டாம் கட்ட போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக, கர்நாடகாவின் அனைத்து பா.ஜ., தலைவர்களும் இணைந்து போராட்டம் நடத்தப்படும். விரைவில் இரண்டாம் கட்ட பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -