பா.ஜ.,வுக்கு ஹிந்து மத கொள்கைகள் புரியவில்லை: ராகுல் விமர்சனம்
பா.ஜ.,வுக்கு ஹிந்து மத கொள்கைகள் புரியவில்லை: ராகுல் விமர்சனம்
ADDED : ஜூலை 04, 2024 01:23 AM

புதுடில்லி, “வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பா.ஜ.,வினருக்கு, ஹிந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகள் புரியவில்லை,” என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான ராகுல் விமர்சித்துள்ளார்.
காங்., - எம்.பி., ராகுல், எதிர்க்கட்சி தலைவரான பின், புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில் முதன் முறையாக சமீபத்தில் பேசினார். அப்போது, பிரதமர் மோடி, பா.ஜ., மீது கடுமையான குற்றச்சாட்டுகளை, அவர் முன்வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தின் ஆமதாபாதில், காங்., அலுவலகம் முன், நேற்று முன்தினம் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, காங்., தொண்டர்களுக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வன்முறைக் களமாக அப்பகுதி மாறியது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவு:
குஜராத்தில், காங்., அலுவலகத்தின் மீதான கோழைத்தனமான மற்றும் வன்முறை தாக்குதல், பா.ஜ., மற்றும் சங்பரிவார் பற்றிய என் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
வன்முறையையும், வெறுப்பையும் பரப்பும் பா.ஜ.,வினர், ஹிந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை. சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு குஜராத் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். அங்கு, 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.