இன்னொரு ஜெகதீஷ் ஷெட்டராக விரும்பவில்லை பா.ஜ., முன்னாள் எம்.பி., சதானந்த கவுடா
இன்னொரு ஜெகதீஷ் ஷெட்டராக விரும்பவில்லை பா.ஜ., முன்னாள் எம்.பி., சதானந்த கவுடா
ADDED : ஜூலை 02, 2024 06:39 AM

பெங்களூரு: 'காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், என்னை தொடர்பு கொண்டு, அக்கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதற்கு நான், இன்னொரு ஜெகதீஷ் ஷெட்டராக விரும்பவில்லை என்று கூறிவிட்டேன்' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., சதானந்த கவுடா கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, கட்சி மேலிடத்துக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். அதை சரி செய்ய, கோரிக்கை விடுத்துள்ளேன். கடிதம் தொடர்பாக கேள்விப்பட்ட விஜயேந்திரா, எனது வீட்டுக்கு வந்து விவாதித்தார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை. சட்டசபை தேர்தலுக்கு பின், மாநில பா.ஜ.,வில், எந்த பிரச்னையையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
பிரதமர் மோடியின் பெயரை வைத்து வெற்றி பெறலாம் என்ற அதீத நம்பிக்கையால், ஒன்பது இடங்களை இழந்தோம். இதற்கு முன்பு, மத்தியிலும், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை ஏற்பட்ட தோல்விக்கு நான் உட்பட அனைவரின் தவறும் உள்ளது.
பழைய மைசூரில், ம.ஜ.த.,வுடன் நாங்கள் இணைந்ததால், பா.ஜ., வெற்றி பெற்றதாக மக்கள் பேசி வருகின்றனர். இருப்பினும், துமகூரு, சிக்கமகளூரு, சிக்கபல்லாபூர் போன்ற இடங்களில் எங்களின் வெற்றி கடினமாக இருந்தது.
வரும் 4ம் தேதி நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில், அனைத்து தகவல்கள் குறித்தும் விவாதிப்போம். கட்சியை வேரில் இருந்து கட்டமைக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, இதை செயல்படுத்த முடியாது. மாநில தலைவர் விஜயேந்திராவை குற்றம் சொல்லவில்லை. அவர் பதவியேற்றவுடன் உடனடியாக தேர்தலை சந்தித்துள்ளார்.
கட்சி, செயல் வீரர்களை இழந்துவிட்டது. இது தான் நமக்கு எச்சரிக்கை மணி. கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக், புள்ளி விபரங்களுடன் பேச வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது சண்டையிடுவது மட்டுமல்ல.
கட்சிக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததே, கட்சி சீரழிந்து கிடப்பதற்கு காரணம் என்பதை நேரடியாகவே சொல்வேன்.
நான், மாநிலத் தலைவராக இருந்தபோது, கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஜனார்த்தன ரெட்டி, பசனகவுடா பாட்டீல் எத்னால், ரேணுகாச்சார்யாவை 'சஸ்பெண்ட்' செய்தேன்.
இது கட்சியை வளர செய்தது. இது தற்போது நடப்பதில்லை. மற்ற கட்சிகள் போன்று பா.ஜ., இருக்கக்கூடாது. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், என்னை தொடர்பு கொண்டு, அக்கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்.
அதற்கு நான், 'இன்னொரு ஜெகதீஷ் ஷெட்டராக விரும்பவில்லை' என்று நேரடியாக கூறிவிட்டேன். எனக்கு தெரிந்தால் செய்வேன், இல்லையெனில் அமைதியாக இருப்பேன்.
ஈஸ்வரப்பா மீண்டும் பா.ஜ.,வுக்கு வருகிறாரா என்று தெரியாது. மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றவர், போட்டி வேட்பாளராக போட்டியிட்டது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.