இதிலுமா அரசியல் செய்வீங்க…! பா.ஜ.,வை கேட்கிறார் அகிலேஷ்
இதிலுமா அரசியல் செய்வீங்க…! பா.ஜ.,வை கேட்கிறார் அகிலேஷ்
ADDED : ஆக 16, 2024 01:44 PM

லக்னோ: 'பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்படும் சம்பவத்தில் அரசியல் செய்யக் கூடாது. ஆனால் இது போன்ற சம்பவங்களில் அரசியல் செய்யும் திறமை பா.ஜ.,வுக்கு உள்ளது,' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிகாரிகளை பா.ஜ., அரசு இடமாற்றம் செய்யும். அவர்களுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை பணியில் அமர்த்தி தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறார்கள். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கனவுகள் நிறைவேற வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் தான் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை.
அரசியல் ஆதாயம்
கோல்கட்டாவில் மருத்துவ கல்லூரில் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற சம்பவங்களில் அரசியல் செய்யக்கூடாது. ஆனால் இது போன்ற சம்பவங்களில் அரசியல் செய்யும் திறமை பா.ஜ.,வுக்கு உள்ளது. எந்தவொரு பிரச்னையிலும் அரசியல் ஆதாயம் பெறும் திறமை அவர்களுக்கு (பா.ஜ.,) மட்டுமே உள்ளது. மம்தா பானர்ஜி ஒரு பெண் முதல்வர்; குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

