ADDED : ஆக 15, 2024 04:03 AM

மங்களூரு : 'ஊழல் செய்யவில்லை' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, கோவிலில் சத்தியம் செய்துள்ளார்.
தட்சிண கன்னடா பெல்தங்கடி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, 42. 'முந்தைய பா.ஜ., ஆட்சியில் பெல்தங்கடியில் அரசு விருந்தினர் மாளிகை கட்டியதிலும், நெடுஞ்சாலை பணிகளிலும் ஹரிஷ் பூஞ்சா கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார்.
அவரிடம் எஸ்.ஐ.டி., விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்' என, கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலர் ரக் ஷித் சிவராம், நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தண்டித்து விடு
இந்நிலையில், பெல்தங்கடியில் உள்ள மாரிகுடி அம்மன் கோவிலுக்கு, நேற்று காலை ஹரிஷ் பூஞ்சா சென்று வழிபட்டார்.
“எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நான், இதுவரை ஒரு ரூபாய் கூட ஊழல் செய்தது இல்லை. விருந்தினர் மாளிகை கட்டியதிலும், நெடுஞ்சாலை பணிகளிலும் நான் ஊழல் செய்ததாக ரக் ஷித் சிவராம் கூறி உள்ளார். அவர் கூறுவது அனைத்தும் பொய்.
''நான் ஊழல் செய்தால், என்னை நீயே தண்டித்து விடு. என் மீதான குற்றச்சாட்டு பொய் என்றால், ரக் ஷித் சிவராம் தண்டிக்கப்பட வேண்டும்,” என, அம்மன் முன், ஹரிஷ் பூஞ்சா முறையிட்டு சத்தியம் செய்தார். பின், 11 தேங்காய்களை உடைத்து வழிபட்டார்.
சர்ச்சை பேச்சு
பொதுவாக கர்நாடக அரசியல்வாதிகள், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறும்போது, 'கோவிலுக்கு வந்து சத்தியம் செய்ய தயாரா?' என்ற சவாலை முன்வைப்பர்.
இதுவரை யாரும், கோவிலுக்கு சென்று சத்தியம் செய்தது இல்லை. ஆனால் ஹரிஷ் பூஞ்சா கோவிலுக்கு சென்று, சத்தியம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஹரிஷ் பூஞ்சா, முதல்வர் சித்தராமையாவை அடிக்கடி விமர்சித்து பேசுவதில் கைதேர்ந்தவர். சித்தராமையா ஆட்சியில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர் என, சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
வனப்பகுதியில் கட்டப்பட்டு இருந்த வீடுகளை அகற்ற முற்பட்ட வனத்துறையினரிடம் சண்டை போட்டதுடன், வன அதிகாரியை ஆபாசமாக திட்டிய சர்ச்சையிலும் சிக்கினார்.
ரவுடி ஒருவரை விடுவிக்க கோரி, போலீஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.