சித்தராமையா நாற்காலிக்கு வேட்டு வைக்க பா.ஜ., தீவிரம்!
சித்தராமையா நாற்காலிக்கு வேட்டு வைக்க பா.ஜ., தீவிரம்!
ADDED : ஜூலை 31, 2024 04:55 AM
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க விடாமல் தடுக்க, துணை முதல்வர் சிவகுமார் மேற்கொண்ட முயற்சி அனைத்தும் வீணானது.
கனவுக்கு வேட்டு
லோக்சபா தேர்தலில் காங்கிரசை அதிக இடங்களில் வெற்றி பெற வைத்து, அதன் மூலம் முதல்வர் பதவி வாங்கிவிடலாம் என, மாநில தலைவராக உள்ள துணை முதல்வர் சிவகுமார் நினைத்திருந்தார்.
ஆனால் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. சிவகுமாரின் திட்டம் தவிடு பொடியானது. தம்பி சுரேஷும், பெங்களூரு ரூரல் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இதனால், சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஐந்தாண்டுகளும் நிம்மதியாக முதல்வராக இருந்து விட்டு செல்லலாம் என்று கனவில் இருந்தார். ஆனால், அவரது கனவுக்கு வேட்டு வைக்கும் வகையில், வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு, 'மூடா' முறைகேடு நடந்துள்ளது.
'இந்த இரண்டு முறைகேட்டுக்கும் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும், விசாரணையை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளான பா.ஜ., -- ம.ஜ.த., நெருக்கடி கொடுத்து வருகின்றன.
ஆனால், பதவி விலக மறுப்பதுடன், இரு முறைகேடுகளையும் சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுக்கவும் சித்தராமையா மறுத்து வருகிறார். முதலில் இந்த இரண்டு முறைகேடுகள் குறித்தும், பா.ஜ., பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை.
இதனால் கடுப்பான பா.ஜ., மேலிடம், 'முதல்வரின் நாற்காலியை ஆட்டி பார்க்கும் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன.நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நமது ஆட்சியின் போது அரசுக்கு எதிராக, காங்கிரஸ் எப்படி எல்லாம் போராட்டம் நடத்தியது என்பதை மறந்து விட்டீர்களா' என்று சாட்டையடி கொடுத்தது.
நெருக்கடி
அதன்பின்னரே இரண்டு முறைகேடுகள் தொடர்பாக, கர்நாடக பா.ஜ., போராட்டத்தை தீவிரப்படுத்தியது. சட்டசபையிலும் இரவு, பகல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது.
மூடாவில் நடந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் பதவி விலக கோரி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாதயாத்திரை நடத்தவும் பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
வரும் 3ம் தேதி பெங்களூரு கெங்கேரியில் இருந்து பாதயாத்திரை புறப்படுகிறது. இந்த பாதயாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. அதையும் மீறி பாதயாத்திரை நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
கடந்த 2008- - 2013 பா.ஜ., ஆட்சியில் கனிம சுரங்க முறைகேடு நடந்தது. இதை கண்டித்து, பெங்களூரில் இருந்து பல்லாரி வரை பாதயாத்திரை நடத்தி, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார் சித்தராமையா. இதன் மூலம் 2013ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், சித்தராமையா முதல்வரும் ஆனார்.
எந்த பாதயாத்திரை நடத்தி அவர் முதல்வரானாரோ, அதே பாதயாத்திரை மூலம் அவரை முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்கி விட வேண்டும் என, பா.ஜ., நினைத்து உள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைவதை பார்க்கும்போது, நெருக்கடி ஏற்பட்டு சித்தராமையா பதவி விலகினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.