பலாத்கார வழக்கில் பா.ஜ., பிரமுகர் தேவராஜ்கவுடா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
பலாத்கார வழக்கில் பா.ஜ., பிரமுகர் தேவராஜ்கவுடா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
ADDED : மே 12, 2024 07:13 AM

ஹாசன்: பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான தேவராஜ்கவுடா, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் பென்டிரைவ் கசிய விட்டதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., பிரமுகரும், வழக்கறிஞருமான தேவராஜ்கவுடா சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
பிரஜ்வல் தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியான வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு குழு, அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இதற்கிடையில், தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த பிப்ரவரியில் ஒரு பெண், தேவராஜ்கவுடா மீது ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், அவர் மீது பலாத்கார வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், அவர் தலைமறைவாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் போலீசார், அவரை கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சென்ற சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரது காரில் இருந்த ஆவணங்கள், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.
பின், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நேற்றிரவு நொளேநரசிபுரா ஜெ.எம்.எப்.சி., முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.சித்தராமா வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடத்திய பின், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் ஒப்படைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, வரும் 24 ம் தேதி வரை சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.