காங்., மேலிடத்திற்கு செல்லும் கருப்பு பணம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றச்சாட்டு
காங்., மேலிடத்திற்கு செல்லும் கருப்பு பணம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றச்சாட்டு
ADDED : ஆக 04, 2024 11:02 PM

ராம்நகர்: மக்கள் பணத்தில் ஊழல் செய்து, காங்கிரஸ் மேலிடத்துக்கு, இங்குள்ள அரசு கருப்பு பணமாக அனுப்பி வைப்பதாக, இரண்டாவது நாள் பாதயாத்திரையில் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றஞ்சாட்டினார்.
'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும், முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரியும் பெங்களூரில் இருந்து மைசூரு வரை, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சியினர் பாதயாத்திரை நடத்துகின்றனர்.
நேற்று முன்தினம் பெங்களூரு கெங்கேரி கெம்பம்மா கோவிலில் இருந்து பாதயாத்திரை துவங்கப்பட்டது. முதல் நாளில் 16 கி.மீ., துாரம் நடந்து, ராம்நகர், பிடதியில் பாதயாத்திரை நிறைவு செய்யப்பட்டது. அங்கு உள்ள மஞ்சுநாதா கன்வென்ஷன் அரங்கில் இரு கட்சிகளின் தொண்டர்களும் தங்க வைக்கப்பட்டனர்.
போராட்டம் ஓயாது
நேற்று காலை 10:00 மணிக்கு மஞ்சுநாதா கன்வென்ஷன் அரங்கில் இருந்து, இரண்டாவது நாள் பாதயாத்திரை துவங்கியது. 21 கி.மீ., துாரம் பாதயாத்திரை சென்ற பின், ராம்நகரில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள கெங்கல் ஆஞ்சநேயா கோவில் முன் நிறைவு பெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தொண்டர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
முன்னதாக, ராம்நகரில் நடந்த பாதயாத்திரையின் போது, விஜயேந்திரா பேசியதாவது:
பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து நடத்தும் பாதயாத்திரையை பார்த்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு துாக்கம் வரவில்லை. எங்கள் பாதயாத்திரையை அலட்சியப்படுத்தும் வகையில் பேசுகின்றனர். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கும் வரை, எங்கள் போராட்டம் ஓயாது.
கை நழுவும் நேரம்
எஸ்.டி., சமூக மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணத்தை கொள்ளை அடித்து உள்ளனர்.
கர்நாடக மக்களின் வரி பணத்தை, காங்கிரஸ் மேலிடத்துக்கு கருப்பு பணமாக, காங்கிரஸ் அரசு அனுப்பி வைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக பாதயாத்திரை நடத்தவில்லை. ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு நீதி கிடைக்க போராடுகிறோம்.
சட்டசபையில் நாங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், முதல்வரும், துணை முதல்வரும் ஓடி ஒளிந்தனர்.
மைசூரு மக்கள், 'மூடா'வில் நிலத்திற்காக விண்ணப்பித்து காத்து இருந்தனர். ஆனால் வீட்டுமனை கிடைக்க விடாமல் ஆட்சியில் இருப்பவர்கள் முறைகேடு செய்து விட்டனர்.
டாக்டர் அம்பேத்கர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், காங்கிரஸ் அரசால் பயனாளிகளுக்கு வீடு வழங்க முடியவில்லை. சித்தராமையா கையில் இருந்து முதல்வர் பதவி கை நழுவும் நேரம் வந்து விட்டது. அரசின் ஊழல் குறித்து மாநில மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.