உள் ஒப்பந்த அரசியல் செய்யும் தலைவர்கள் பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னால் குற்றச்சாட்டு
உள் ஒப்பந்த அரசியல் செய்யும் தலைவர்கள் பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னால் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 29, 2024 06:41 AM

விஜயபுரா, : முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர், உள்ஒப்பந்த அரசியல் செய்வதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி உள்ளார்.
விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:
மூடாவில் நடந்த முறைகேட்டை கண்டித்து பெங்களூரில் இருந்து மைசூருக்கு எங்கள் கட்சி தலைவர்கள் பாதயாத்திரை செல்வது மகிழ்ச்சி. ஆனால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திராவின் தீவிர ஆதரவாளராக இருந்த ராஜிவ், மூடா தலைவராக இருந்த போது தான் முறைகேடு நடந்து உள்ளது. முறைகேட்டில் இருந்து தப்பிக்க அவர் காங்கிரசில் இணைந்தார்.
மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா மட்டும் குறிவைக்க கூடாது. காங்கிரசுக்கு எதிராகவும் போராட வேண்டும்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வெளியானதும், நாகேந்திராவிடம் இருந்து அமைச்சர் பதவியை பறித்து இருக்க வேண்டும். சி.ஐ.டி.,க்கு பதில் சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோற்றதற்கும், லோக்சபா தேர்தலில் அதிக தொகுதியில் வெற்றி பெறாததற்கும் உள்ஒப்பந்த அரசியலே காரணம். எடியூரப்பா, சித்தராமையா, சிவகுமார் உள்ஒப்பந்த அரசியல் செய்கின்றனர்.
மக்களுக்கு எல்லாம் தெரியும். மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு, மூடா முறைகேட்டில் தொடர்பு இருந்தால் அவரிடமும் விசாரிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.