ADDED : ஜூலை 04, 2024 01:57 AM

ரோஸ் அவென்யூ:பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி பா.ஜ., தலைவர்கள் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.
லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் ஆற்றிய முதல் உரையின்போது, ஹிந்துக்களுக்கு எதிராகவும் பா.ஜ.,வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவரது பேச்சுக்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தன்னுடைய பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென அக்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நேற்றும் பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்சல்மர் ஹவுஸ் அருகே ஏராளமான பா.ஜ., தலைவர்களும் தொண்டர்களும் கூடினர்.
ராகுலுக்கும் அவரது கட்சிக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு, அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
முன்னதாக போராட்டக்காரர்களிடம் பா.ஜ., இளைஞரணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா பேசியதாவது:
இது உரை நிகழ்த்துவதற்கான நேரம் அல்ல. இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்கு எதிராக தீவிரமாகப் போராடுவதற்கான நேரம்.
ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயமும் வன்முறையில் இருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டியது, மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்துக்களை அவமதிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். முன்பு காவி பயங்கரவாதம் என்ற போலிக் கதையை உருவாக்க முயன்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் பா.ஜ., - எம்.பி.,க்கள் மனோஜ் திவாரி, பன்சூரி ஸ்வராஜ், மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “கருத்துக் கணிப்பு ஹிந்துவான ராகுல் மன்னிப்புக் கேட்காத பட்சத்தில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்,” என்றார்.