பேச்சு திறன் கொண்டவர்கள் இல்லையே சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர்கள் கவலை
பேச்சு திறன் கொண்டவர்கள் இல்லையே சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர்கள் கவலை
ADDED : ஜூன் 23, 2024 06:30 AM
பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டத்துக்கு, முன்னேற்பாடு நடக்கும் நிலையில், அரசின் காதைத்திருகும் அளவுக்கு பேச்சுத்திறன் கொண்ட தலைவர்கள் பற்றாக்குறை உள்ளதால், பா.ஜ., கவலையில் ஆழ்ந்துள்ளது.
கர்நாடக பா.ஜ.,வில் எதிர்க்கட்சியினரை தன் பேச்சுத்திறனால் கட்டிப்போடுவதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வல்லமை பெற்றவர்.
அவர், தன் ஷிகாரிபுரா தொகுதியை, தன் மகனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வுபெறும் கட்டத்தில் உள்ளார்.
இவருக்கு பின், எதிராளிகளை திறமையாக எதிர்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் மாதுசாமி, சி.டி.ரவி உள்ளிட்டோர் சட்டசபை தேர்தலில் தோற்றனர். சி.டி.ரவிக்கு மேலவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரை தன் பேச்சால் அடக்கும் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட தலைவர்களும் தற்போது சட்டசபையில் இல்லை. எம்.பி.,க்களாக தேசிய அரசியலுக்கு சென்றுள்ளனர்.
சட்டசபையில் ஆளுங்கட்சியினரை சமாளிக்கும், பேச்சு திறன் கொண்ட தலைவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பா.ஜ., தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மற்றொரு பக்கம், ஆளுங்கட்சியான காங்கிரஸ் 'குஷி' அடைந்துள்ளது. சட்டசபையில் எடியூரப்பா, குமாரசாமி, பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் இல்லாததால், காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
பா.ஜ.,வில் முன்னணியில் இருந்த தலைவர்கள், நா வல்லமை கொண்டவர்கள் சட்டசபையில் இல்லை.
தற்போதைய தலைவர்களுக்கு அனுபவம் போதவில்லை. சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர்கள் அசோக், பைரதி பசவராஜ், சுரேஷ்குமார், சுனில்குமார், முனிரத்னா உள்ளனர். இவர்களும் பேச்சுத்திறன் கொண்டவர்கள் தான்.
இவர்கள் சட்டசபையில், ஆளுங்கட்சியினரை எதிர்கொள்வர். மேலவையில் சி.டி.ரவி இருக்கிறார். இங்கு அவர் தன் பேச்சுத் திறனை வெளிப்படுத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார்.