ADDED : மே 12, 2024 07:00 AM

மைசூரு: 'கர்நாடகா மேலவை தேர்தலிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்,'' என, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக மேலவையில், பா.ஜ.,வின் மூன்று; ம.ஜ.த.,வின் இரண்டு; காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினர் ஓய்வு பெறுகின்றனர்.
இதற்கான தேர்தல் ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதற்கு பா.ஜ., - காங்., - ம.ஜ.த., தயாராகி வருகின்றன.
இந்நிலையில், மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும். கர்நாடக மேலவையில், மூன்று ஆசிரியர், மூன்று பட்டதாரி தொகுதிகளுக்கு ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இதில், பா.ஜ., ஐந்து தொகுதிகளிலும், ம.ஜ.த., ஒன்றிலும் போட்டியிடும்.
லோக்சபா தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.
கர்நாடகாவில் குறைந்தபட்சம் 24 - 25 இடங்களில் வெற்றி பெறுவோம். காங்கிரசில் பிரதமராகும் தகுதி யாருக்கு உள்ளது என்பதை சொல்லுங்கள். மோடி பிரதமராக வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
கர்நாடகாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் நுாற்றுக்கணக்கான ஏரிகள் வறண்டுவிட்டன. கடும் வறட்சியால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மாநில அரசு நிவாரணம் வழங்கி, விவசாயிகளுக்கு உதவ வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய, மாநில அரசை வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர்கூறினார்.