பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கைது வழக்கில்... திருப்பம்! காங்., புள்ளி நெருக்கடியால் புகார் அளித்த ஒப்பந்ததாரர்
பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கைது வழக்கில்... திருப்பம்! காங்., புள்ளி நெருக்கடியால் புகார் அளித்த ஒப்பந்ததாரர்
ADDED : செப் 17, 2024 05:28 AM

பெங்களூரு: ஒப்பந்ததாரரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா வழக்கில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முக்கிய புள்ளியில் நெருக்கடியால், ஒப்பந்ததாரர் மூலம் புகார் அளிக்க வைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில், மாநகராட்சி பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர் சலுவராஜு, 44. இவருக்கு, குப்பை மேலாண்மை செய்யும் ஒப்பந்தம் வழங்குவதற்காக, தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 30 லட்சம் ரூபாய் கமிஷன் கேட்டதாக, ஒப்பந்ததாரர் குற்றஞ்சாட்டினார்.
இதில், 20 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும், மீதி 10 லட்சம் ரூபாய் வழங்காததால், ஒப்பந்ததாரரை தகாத வார்த்தையில் முனிரத்னா திட்டியதாகவும் கூறி, அவருடன் உரையாடிய ஆடியோவை, ஒப்பந்ததாரர் வெளியிட்டார். அதில், ஒக்கலிகா மற்றும் தலித் சமுதாயம் குறித்து முனிரத்னா தவறாக பேசியிருந்தார். அப்போது, காங்., முன்னாள் கவுன்சிலர் வேலு நாயக்கர் குறித்தும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
* 3 மணி நேரம்
அவர்கள் இருவரும் வயாலி காவல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், முனிரத்னா மீது, ஜாமினில் வர முடியாத சட்டப்பிரிவின் கீழ், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன், ஆந்திராவுக்கு தப்பி செல்ல முயன்ற போது, கோலாரின் முல்பாகல் அடுத்த நங்கிலி கிராமத்தில் முனிரத்னா கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். சேஷாத்திரிபுரம் உதவி கமிஷனர் பிரகாஷ், அவரிடம் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அவர் எந்த பதிலும் சொல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும், என்னுடன் பல ஆண்டுகளாக இருந்த சலுவராஜு, வேலு நாயக்கர் ஆகியோரே எனக்கு துரோகம் செய்து விட்டதாக முனிரத்னா கூறியதாக தெரிகிறது.
* குரல் மாதிரி
மேலும், தடயவியல் ஆய்வு நிபுணர்கள், போலீஸ் நிலையத்துக்கு வந்து அவரது குரல் மாதிரியை சேகரித்தனர். ஆடியோவில் உள்ள குரலையும், அவரது உண்மையான குரலையும் ஒப்பீடு செய்வதற்காக, அது ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், முனிரத்னாவை நெருக்கடியில் சிக்க வைப்பதற்கு, அவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற காங்கிரஸ் வேட்பாளர் குஸ்மாவின் தந்தை ஹனுமந்தராயப்பா தான் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இவர், பெங்., தெற்கு காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
* 7 ஆடியோ
ஒப்பந்ததாரரையும், அவரது நண்பருடனும், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பேசிய ஏழு ஆடியோ பதிவுகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.
ஆடியோவில், ஹனுமந்தராயப்பா பேசியிருப்பதாவது:
சிறிய விஷயத்துக்காக புகார் அளித்துள்ளாய். வேலுவுடன் பேசி சரி செய்கிறேன். டி.சி.பி., கமிஷனரிடம் செல்ல வேண்டாம். நான் சரி செய்கிறேன் வா. நீ ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவன். என் தாலுாகாவை சேர்ந்தவன். நம் ஆட்சி இருக்கும் போது, நீ வேறு யாருடமோ சென்றால் வேலை நடக்குமா.
என்ன உன் கதை. உன் விஷயத்தை செட்டில் செய்கிறேன் வா என்று அழைத்தால், வெறும் கதை சொல்கிறார். போனால் போகட்டும், நம் தாலுகாவை சேர்ந்தவன், உதவலாம் என்று பார்க்கிறேன். வெறும் கதை சொல்லி கொண்டு, நாடகமாடுகிறாய்.
* டெண்டர் ரத்து
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து, சலுவராஜுவுக்கு தொந்திரவு கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளேன். திங்கட்கிழமை வரை காத்திருப்பேன். அதற்குள் வந்தால் சரி, இல்லை என்றால், நானே முன்னின்று, டெண்டரை ரத்து செய்து வைப்பேன்.
உனக்கு கொழுப்பு அதிகமாகி விட்டது. நம் தாலுகாவை சேர்ந்தவன் என்று பார்க்கிறேன் பார்த்தால், வருகிறேன், வருகிறேன் என்று கூறுகிறாய். திங்கட்கிழமைக்குள் வந்தால் சரி, இல்லை என்றால், யார் உனக்கு உதவுவார்கள் என்று பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதையறிந்த பா.ஜ.,வினர், அரசியல் விரோதம் காரணமாக, காங்கிரசார் திட்டமிட்டு முனிரத்னா மீது பழி சுமத்தி உள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
* அமைச்சர் ஆறுதல்
இதற்கிடையில், முனிரத்னாவை கண்டித்து, பெங்களூரு குயின்ஸ் சாலை காங்கிரஸ் அலுவலகம் முன், அக்கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி சவும்யா ரெட்டி தலைமையில், மகளிர் தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுபக்கம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், ஒப்பந்ததாரர் சலுவராஜு வீட்டுக்கு சென்று, அவரது மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
முனிரத்னா விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
...பாக்ஸ்...
முதல்வரிடம் மனு
ஒக்கலிகா சமுதாயம் குறித்து, முனிரத்னா தவறாக பேசியதாக கூறி, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி, அச்சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் நேற்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்து வலியுறுத்தினர். அவரும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
...பாக்ஸ்...
17_Hanumanthrayappa ஹனுமந்தராயப்பா
ஆம், நான் தான் பேசியது!
பெங்., தெற்கு காங்கிரஸ் தலைவர் ஹனுமந்தராயப்பா பெங்களூரில் நேற்று கூறியதாவது:
ஆம், ஆடியோவில் இருப்பது என் குரல் தான். நான் தான் பேசியது. ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், என் தாலுகாவை சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு உதவி செய்ய பேசினேன்.
மற்றவர்கள் போன்று, என்னுடைய குரல் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவருக்கு உதவி செய்யவே நான் தொடர்பு கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
...புல் அவுட்...
முனிரத்னா தவறு செய்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். கட்சி சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், விரோத அரசியல் செய்ய கூடாது. பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதிவாகியும், நடவடிக்கை எடுக்காதது ஏன்.
- அசோக், எதிர்க்கட்சி தலைவர், சட்டசபை
***