மகனுக்கு 'சீட்' கொடுக்காததால் சுதாகரை காக்க வைத்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,
மகனுக்கு 'சீட்' கொடுக்காததால் சுதாகரை காக்க வைத்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,
ADDED : மார் 31, 2024 11:08 PM

பெங்களூரு: சிக்கபல்லாப்பூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகரை, தன் வீட்டின் வாசலில் காக்க வைத்ததுடன், அவரை சந்திக்காமல் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் திருப்பி அனுப்பி உள்ளார்.
பெங்களூரு எலஹங்கா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத். லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதி பா.ஜ., 'சீட்'டை, மகன் அலோக்கிற்கு வாங்கி தர முயற்சி செய்தார்.
ஆனால் முன்னாள் அமைச்சர் சுதாகருக்கு, கட்சி மேலிடம் வழங்கியது. இதனால் சுதாகர் மீது, விஸ்வநாத் அதிருப்தியில் உள்ளார். விஸ்வநாத்தின் ஆதரவாளர்கள் சுதாகருக்கு எதிராக, 'கோ பேக்' பிரசாரம் துவக்கி உள்ளனர்.
இந்நிலையில் விஸ்வநாத்தை சமாதானப்படுத்துவதற்காக, எலஹங்காவில் உள்ள அவரது வீட்டிற்கு, நேற்று காலை சுதாகர் வந்தார். அப்போது விஸ்வநாத் வீட்டில் இல்லை. அவர் வெளியே சென்று இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் கூறினர். இதனால் வீட்டின் முன்பு சுதாகர் காத்து இருந்தார். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும், விஸ்வநாத் வரவில்லை. கடுப்பான சுதாகர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர் சுதாகர் அளித்த பேட்டியில், ''விஸ்வநாத் எனது நண்பர். பல முறை மொபைல் போனில் அவரை அழைத்தேன்; அவர் எடுக்கவில்லை. நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதில் இல்லை. அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. அதிருப்தியில் இருக்கும் அவரை, எடியூரப்பா சமாதானப்படுத்துவார். மோடியின் பெயரில் ஓட்டு கேட்பேன். வரும் 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்,'' என்றார்.
எம்.எல்.ஏ., விஸ்வநாத் கூறுகையில், ''என் வீட்டிற்கு வரும் முன்பு, என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். திடீரென வந்தால், நான் என்ன செய்வது. சுதாகரிடம் பேச எனக்கு என்ன உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெங்களூரு ரூரல், சிக்கபல்லாப்பூரில் பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்நின்று செய்து வருகிறேன்,'' என்றார்.

