சட்டசபையில் விடிய விடிய போராட்டம் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வௌியேற்றம்
சட்டசபையில் விடிய விடிய போராட்டம் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வௌியேற்றம்
ADDED : ஆக 01, 2024 11:35 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில சட்டசபை நேற்று முன்தினம் கூடியபோது, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பினர்.
கோஷம்
இதற்கு முதல்வர் பதில் அளிக்க மறுத்ததை அடுத்து, அவர்கள் சபையில் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிடத் துவங்கினர். முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சில ஆவணங்களை கிழித்தெறிந்தனர்.
அமளியில் ஈடுபட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ உத்தரவிட்டார்.
வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் நேற்றைய சட்டசபை கூட்டம் முடிந்த பின்னும் வீடு திரும்பாமல், சபையின் வெளிப்புறத்திலேயே தங்கினர். இரவு முழுதும் அங்கேயே தரையில் பாய் விரித்து படுத்து துாங்கினர்.
நேற்று காலை சபையில் கூடிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சபை நடவடிக்கை துவங்குவதற்கு முன்னரே, முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
சஸ்பெண்ட்
ஆளும் தரப்பு, எதிர் தரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. நிலைமை மோசமானதை தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை இன்று மதியம் 2:00 மணி வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் மஹ்தோ உத்தரவிட்டார்.
அவர்கள் சபையில் இருந்து வெளியேற மறுத்தை தொடர்ந்து, சபை பாதுகாவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.