லோக்சபா தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு பா.ஜ., - எம்.பி., பான்சுரி பதில் அளிக்க உத்தரவு
லோக்சபா தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு பா.ஜ., - எம்.பி., பான்சுரி பதில் அளிக்க உத்தரவு
ADDED : ஆக 14, 2024 08:28 PM

புதுடில்லி:லோக்சபா தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற புதுடில்லி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பன்சுரி ஸ்வராஜின் வெற்றி செல்லாது என அறிவிக்க உத்தரவிடக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சோம்நாத் பாரதி தாக்கல் செய்த மனுவுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பான்சூரி ஸ்வராஜுக்கு டில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
தலைநகர் டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 25ல் தேர்தல் நடந்து ஜூன் 4ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. ஏழு தொகுதிகளையும் பா.ஜ., தக்க வைத்துக் கொண்டது.
புதுடில்லி தொகுதியில் பா.ஜ., சார்பில் பான்சுரி ஸ்வராஜ், ஆம் ஆத்மி சார்பில் சோம்நாத் பாரதி, பகுஜன் சமாஜ் சார்பில் ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். சோம்நாத் 3 லட்சத்து 74,815 ஓட்டுக்களும் பன்சுரி 4 லட்சத்து 53,185 ஓட்டுக்களும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் சோம்நாத் தாக்கல் செய்த மனு:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 80 மற்றும் 81வது பிரிவின் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்கிறேன். பான்சுரி ஸ்வராஜ் மற்றும் அவரது தேர்தல் ஏஜென்ட்கள் தேர்தலில் பல முறைகேடுகளை செய்தனர்.
ஆம் ஆத்மியின் ஓட்டுக்களைக் குறைக்கவும் அதன் பலன் பான்சுரிக்கு கிடைக்கவும், ராஜ்குமார் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதுடில்லி தொகுதியில் போட்டியிட வைத்தனர்.
டில்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சராக இருந்த ராஜ்குமார், ஏப்ரல் 9ம் தேதி வரை ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்து வந்த நிலையில் ஏப். 10ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பகுஜன் சமாஜ் சார்பில் புதுடில்லி தொகுதியில் போட்டியிட்டார்.
மேலும், தேர்தல் நாளன்று பான்சுரியின் தேர்தல் ஏஜென்ட்கள் ஓட்டுச் சீட்டு எண், போட்டோ, தேர்தல் சின்னம் மற்றும் பிரதமர் மோடி படம் பொறித்த நோட்டீஸ் ஆகியவற்றை ஓட்டுச்சாவடிக்குள் வைத்திருந்தனர். ஓட்டுச் சாவடிக்குள்ளேயே வாக்காளர்களிடம் பிரசாரமும் செய்தனர். இதை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆம் ஆத்மிக்கு எதிராக களம் இறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், ஜூலை 10ம் தேதி பா.ஜ.,வில் இணைந்தார். பலமுறைடுகளை செய்து வெற்றி பெற்றுள்ள பா.ஜ., - எம்.பி., பான்சுரி ஸ்வராஜின் வெற்றி செல்லாது என அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா, 30 நாட்களுக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு பான்சுரி ஸ்வராஜூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.