ஊழலுக்கு எதிராக பா.ஜ., போராடவில்லை: பிரியங்கா பேச்சு
ஊழலுக்கு எதிராக பா.ஜ., போராடவில்லை: பிரியங்கா பேச்சு
ADDED : ஏப் 14, 2024 02:51 PM

ஜெய்ப்பூர்: ' ஊழலுக்கு எதிராக பா.ஜ., போராடவில்லை. அவர்களை எதிர்ப்பவர்களை அடக்கவே விரும்புகிறார்கள்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாலோரில் நடந்த பேரணியில், பிரியங்கா பேசியதாவது: ஜி20 உச்சி மாநாடு போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெறும் போது நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் மற்றொரு உண்மை நாட்டில் பணவீக்கம், வேலையின்மை நிலவுகிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சில குறைகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். நீங்கள் அரசை மாற்றினீர்கள்.
மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்!
வரும் லோக்சபா தேர்தலில் நீங்கள் அனைவரும் உங்கள் மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டும். அசோக் கெலாட் ஆட்சியில் இருந்த போது, மக்களுக்காக துவங்கிய திட்டங்கள் என்ன ஆனது?. அவை நிறுத்தப்பட்டன. இதற்குக் காரணம் நீங்கள் தேர்ந்தெடுத்த பா.ஜ., அரசு மக்கள் நலனுக்காக செயல்படவில்லை. பிரதமர் மோடி தனது பேரணிகளில் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். சில சமயங்களில் அவர் தனது போலி வீரத்தைக் காட்டுகிறார். சில சமயங்களில் கடலின் ஆழத்திற்குச் செல்கிறார்.
திசை திருப்ப முயற்சி!
மக்களாகிய உங்களுக்கும் இவற்றுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?. மக்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஊழலுக்கு எதிராக பா.ஜ., போராடவில்லை. அவர்களை எதிர்ப்பவர்களை அடக்கவே விரும்புகிறார்கள். மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

