பா.ஜ., அலுவலகம் முற்றுகை பி.சி., கூட்டமைப்பு அறிவிப்பு
பா.ஜ., அலுவலகம் முற்றுகை பி.சி., கூட்டமைப்பு அறிவிப்பு
ADDED : ஆக 01, 2024 11:15 PM
மைசூரு: முதல்வர் சித்தராமையாவை ஒழித்துக்கட்ட, பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் முயற்சிப்பதை கண்டித்து, நாளை காலை பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாக, மாநில பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் அமைப்பு தலைவர் சிவராமு, மைசூரில் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் தலைவரான முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி செய்கின்றன. வால்மீகி மேம்பாட்டு ஆணையம், 'மூடா' முறைகேட்டை காரணம் காண்பித்து, அவரை ஒழிக்க முயற்சிக்கின்றன.
இதை கண்டித்து, நாளை காலை 11:00 மணிக்கு மைசூரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இது முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவான போராட்டம் என, நினைக்க வேண்டாம். பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆதரவான போராட்டமாகும்.
வரும் நாட்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை, முதல்வர் சித்தராமையா செயல்படுத்துவார். இதனால் பின்தங்கிய பிரிவுகளின் பொருளாதாரம், சமூக, அரசியல் சக்தி அதிகரிக்கும். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு செய்ததை போன்று, கர்நாடகாவிலும் செய்ய பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர்.
முதல்வர் சித்தராமையாவை, பா.ஜ., - ம.ஜ.த.,வினரால் எதுவும் செய்ய முடியாது. மூடா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் இவரை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அவர்களின் முயற்சி பலன் அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.