ADDED : செப் 02, 2024 11:26 PM

புதுடில்லி: ''கட்சியிலும் ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் ஒரே கட்சியாக பா.ஜ., உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் துவங்கியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள், அதை புதுப்பித்துக்கொள்வர். புதிய உறுப்பினர் சேர்க்கை இயக்கமும் நடத்தப்படும்.
இதன்படி, டில்லியில் பா.ஜ., தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு, புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை, கட்சித் தலைவர் நட்டா வழங்கினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் பல கட்சிகளில் வாரிசு அரசியல் மட்டுமே நடக்கிறது. அதே நேரத்தில் கட்சி நடைமுறைகளிலும் ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும், காப்பாற்றும் ஒரே கட்சியாக பா.ஜ., உள்ளது.
தன் பணிகளை விரிவுபடுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்சியாகவும் பா.ஜ., உள்ளது.
நாட்டில் அரசியல் கட்சிகளின் கலாசாரத்தில் புதிய மாற்றங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்.
மக்கள் அளிக்கும் அங்கீகாரம், அதிகாரத்தின் அடிப்படையில் வளர்ச்சி அடையும் கட்சி அல்லது அமைப்பு, அதன் நடைமுறைகளிலும் ஜனநாயகத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
இல்லையெனில், தற்போது பெரும்பாலான கட்சிகள் உள்ள நிலைக்கே நாமும் தள்ளப்படுவோம்.
கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் என்பது, குடும்பத்தின் விரிவாக்கம் போன்றது. இதில் எண்ணிக்கை மட்டும் முக்கியமில்லை.
கட்சி நிர்வாகிகள் வித்தியாசமாக யோசித்து, கட்சிக்கு அதிகளவில் உறுப்பி னர்களை சேர்க்க வேண்டும். நாட்டின் அனைத்து எல்லையோர கிராமங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
தற்போதுள்ள இளைஞர்கள், ஊழல்களால் நிரம்பி வழியும் தலைப்பு செய்திகளை பார்த்திராதவர்கள். அவர்களிடம் அது குறித்து தெரிவிக்க வேண்டும். அதிகளவில் இளைஞர்களை ஈர்க்க வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, சட்டசபை மற்றும் லோக்சபாவில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும்.
தற்போதைய கட்சி உறுப்பினர் சேர்க்கையில், அதிகளவில் பெண்களை சேர்க்க வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரும்போது, அவர்களை, எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.