ADDED : மே 08, 2024 01:00 AM
புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியை கண்டித்து நேற்று டில்லி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்து, ஆம் ஆத்மி கட்சி நிதியுதவி பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அருகே டில்லி பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
அப்போது டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சி, ஊழல் நிறைந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அக்கட்சியும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் இருந்து நிதி பெற்றது, மிகவும் வெட்கக்கேடானது.
கட்சிகளுக்கு இடையே அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது.
தேச விரோத சக்திகளுடன் கைகோர்த்தவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி நிராகரித்துள்ளது. 'மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் உத்தரவின் பேரில், கெஜ்ரிவாலுக்கு எதிரான மற்றொரு சதி' என, அக்கட்சி கூறியுள்ளது.

