முதல்வர் ராஜினாமா கோரி மைசூரில் பா.ஜ.,வினர் போராட்டம்
முதல்வர் ராஜினாமா கோரி மைசூரில் பா.ஜ.,வினர் போராட்டம்
ADDED : ஜூலை 13, 2024 07:10 AM

மைசூரு, : மனைவிக்கு வீட்டுமனை ஒதுக்கியதை கண்டித்து, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, மைசூரில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். பெங்களூரிலிருந்து மைசூரு புறப்பட்ட பா.ஜ.,வினர், கும்பல கோடில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், வீட்டுமனைகள் வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில், மனைகள் பெறப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
அசோக் கைது
இதற்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா, ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பா.ஜ., தரப்பில் நேற்று மைசூரு வளர்ச்சி ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ.,வினர் மைசூரு மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் நேற்று திரண்டனர். சற்று துாரத்திலேயே போலீசார் தடுப்புகள் அமைத்து, அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற அசோக், முன்னாள் அமைச்சர் அஸ்வத் நாராயணா, எம்.பி., யதுவீர் உட்பட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, மாண்டியா உட்பட பல பகுதிகளில் இருந்து பா.ஜ.,வினர் வந்திருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விஜயேந்திரா மறியல்
பெங்களூரு, சிக்கபல்லாப்பூர், கோலார், ராம்நகர் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட கார்களில் மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் பா.ஜ.,வினர் மைசூரை நோக்கி புறப்பட்டனர்.
இவர்கள், அதிவிரைவு சாலை ஆரம்பிக்கும் கும்பலகோடு பகுதியிலேயே, தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எம்.எல்.ஏ.,க்கள் முனிரத்னா, ரகு, கிருஷ்ணப்பா உட்பட பலரும் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மைசூரை நோக்கி புறப்பட்ட முயன்றபோது, விஜயேந்திரா உட்பட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனாலும், சி.வி.ராமன்நகர் எம்.எல்.ஏ., ரகு, கோலார் முன்னாள் எம்.பி., முனிசாமி உட்பட பலர் மைசூரு சென்று போராட்டத்தில் பங்கேற்றனர்.
மைசூரு நகருக்குள் பா.ஜ.,வினர் வருவதை தடுக்கும் வகையில், நகரை சுற்றி அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து, போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், ஆங்காங்கே போராட்டம் நடந்தது. அப்போது, 'எங்களை தடுத்தாலும் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்' என, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.
...பாக்ஸ்...
படம்: 13_Congress Mysore
பா.ஜ.,வினரை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இடம்: மூடா அலுவலகம் அருகில், மைசூரு.
காங்கிரஸ் பதில் போராட்டம்
ஒரு பக்கம் முதல்வருக்கு எதிராக பா.ஜ.,வினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். மறுபக்கம், முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாக கூறி, மைசூரு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமையில், அக்கட்சியினர், மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் அலுவலகம் எதிரில் நேற்று போராட்டம் நடத்தினர்.
ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். பா.ஜ., காங்கிரஸ் போராட்டங்களால் மைசூரு நகரமே நேற்று போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.