ஆம் ஆத்மி ஆட்சியை முடக்க பா.ஜ., சதி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புகார்
ஆம் ஆத்மி ஆட்சியை முடக்க பா.ஜ., சதி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புகார்
ADDED : ஜூன் 27, 2024 01:44 AM

புதுடில்லி,:“ஆம் ஆத்மி ஆட்சியின் செயல்பாட்டை முடக்குவதற்காக, சி.பி.ஐ.,யை பயன்படுத்தி அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்க வைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. டில்லி அரசுக்கு எதிராக பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது,” என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினார்.
தேசிய தலைநகருக்கு கூடுதல் தண்ணீரை ஹரியானா அரசு திறந்துவிடக் கோரி, மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி சிங், 21ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார்.
உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை லோக் நாயக் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 24 மணி நேர கண்காணிப்பு, சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்து, நலம் விசாரித்தார்.
பின் செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
அமைச்சர் ஆதிஷியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அவர் துணிச்சலானவர் மட்டுமல்ல, மக்களுக்காக போராடக் கூடியவர். டில்லியின் பிரச்னைகளை தீர்க்க தொடர்ந்து போராடி வருகிறார்.
மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்ததில் இருந்து, பல்வேறு மாநில முதல்வர்களுக்கு பிரச்னைகள் அதிகரித்துள்ளது.
டில்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. அரசாங்கத்தை உருவாக்கி சுகாதாரம், கல்வி மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் உழைத்தார். ஆனால் அவருக்கு தடைகள் உருவாக்கப்பட்டன.
பா.ஜ.,வுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., செயல்பட்டு வருகிறது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வருவதைத் தடுக்க சி.பி.ஐ., திட்டமிடுகிறுது.
சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தியதே, பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிக்க மக்களைத் துாண்டியது.
இவ்வாறு அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தலைவர் பிருந்தா காரத்தும் நேற்று ஆதிஷியை சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆதிஷியை சந்திக்க வந்தேன். டில்லி மக்களுக்காக மிகவும் துணிச்சலாக போராடி வருகிறார். மத்திய அரசும், துணைநிலை கவர்னரும் இந்த பிரச்னையை பாரபட்சமாக கையாள்வது வருத்தம் அளிக்கிறது. இது மக்கள் போராட்டம், ஆதிஷியின் போராட்டம் அல்ல. நான் அவளுக்கு மரியாதை செலுத்த இங்கு வந்தேன். அவள் போராட்டத்தில் மீண்டும் பங்கேற்பதை பார்க்க காத்திருக்கிறேன்.
பிருந்தா காரத்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்