பொய் பரப்பும் பா.ஜ., டிபாசிட் இழக்கும் ஆம் ஆத்மி எம்.பி., ஆவேசம்
பொய் பரப்பும் பா.ஜ., டிபாசிட் இழக்கும் ஆம் ஆத்மி எம்.பி., ஆவேசம்
ADDED : செப் 14, 2024 08:51 PM
புதுடில்லி:“முதல்வர் கெஜ்ரிவால் முன்பு போல் செயல்படுவார், அவருடைய மக்கள் பணி பாதிக்கப்படாது. பா.ஜ., பொய் தகவலை பரப்பி வருகிறது,” என, ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறினார்.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டு மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகிய மத்திய விசாரணை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்துள்ளன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் ஏற்கனவே ஜாமினில் வந்த நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், 'துணைநிலை கவர்னர் அனுமதி இல்லாமல் முதல்வர் அலுவலகத்துக்கு செல்ல முடியாது. முதல்வர் என்ற முறையில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கோப்பிலும் கையெழுத்திடவும் முடியாது. எனவே, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்' என பா.ஜ., வலியுறுத்தியது.
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது:
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
கோப்புகளில் கையெழுத்திடவோ, முதல்வராகப் பணியாற்றவோ கெஜ்ரிவாலால் முடியாது என பொய்களை பா.ஜ., பரப்புகிறது. இப்படி பொய்யை வெட்கமின்றி பரப்பியதற்காக அடுத்த ஆண்டு நடக்கும் டில்லி சட்டசபைத் தேர்தலில் டில்லி மக்கள், பா.ஜ.,வை டிபாசிட் இழக்கச் செய்வர்.
முதல்வர் கெஜ்ரிவால் எந்தத் துறையையும் வைத்துக் கொள்ளவில்லை. அனைத்து துறைகளையும் அமைச்சர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். எனவே, அவர் ஆலோசனைப்படி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கோப்புகளில் கையெழுத்திடுவர். துணைநிலை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய கோப்புகளில் மட்டுமே கெஜ்ரிவால் கையெழுத்திட்டு வந்தார். இனியும் அது தொடரும்.
கவர்னர் ஒப்புதலுக்கு செல்லும் கோப்புகளில் கெஜ்ரிவால் கையெழுத்திடுவதை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை. எனவே, முதல்வராக உள்ள கெஜ்ரிவால் டில்லி மக்களுக்கான பணியை 100 சதவீதம் செய்வார்.
டில்லி அரசையோ, முதல்வரையோ செயல்பட விடாமல் உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதனால் மக்களுக்கான எந்தப் பணியிலும் தடை ஏற்படாது.
டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் பொறுப்பேற்றதில் இருந்து மருத்துவம், கல்வி, குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் மகத்தான பணிகளை செய்துள்ளார். அந்தப் பணிகள் தொடரும்.