அம்மன் பெயரால் மக்களை மிரட்டிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,
அம்மன் பெயரால் மக்களை மிரட்டிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,
ADDED : ஆக 17, 2024 11:14 PM

மங்களூரு: 'மழையால் பாதிக்கப்பட்டபோது ஏன் வரவில்லை?' என்று கேள்வி எழுப்பிய தொகுதி மக்களுக்கு, “அம்மன் உங்களை தண்டிப்பார்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா சாபம் விட்டுள்ளார்.
தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, 42. இவரது தொகுதிக்கு உட்பட்டது சவனலு கிராமம்.
சில தினங்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் பெய்த கனமழையால், சில வீடுகள் இடிந்தன.
கிராமத்தை இணைக்கும் ஒரு பாலமும் துண்டிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற, எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா உடனடியாக வரவில்லை.
நேற்று காலை சவனலு கிராமத்திற்கு ஹரிஷ் பூஞ்சா சென்றார். அவரை கிராம மக்கள் சுற்றி வளைத்து, 'மழையால் பாதிக்கப்பட்டபோது எங்களுக்கு ஆறுதல் கூற ஏன் வரவில்லை; இப்போது எதற்காக வருகிறீர்கள்?' என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர். கோபமடைந்த ஹரிஷ் பூஞ்சா, “என்னிடம் நீங்கள் யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை மாரிகுடி அம்மன் தண்டித்துவிடுவார்,” என்று சாபம் விட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இரு நாட்களுக்கு முன்பு ஊழல் செய்யவில்லை என, மாரிகுடி அம்மன் முன், ஹரிஷ் பூஞ்சா சத்தியம் செய்தது குறிப்பிடத்தக்கது.

