ADDED : மார் 13, 2025 02:33 AM
குருகிராம், ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பரிதாபாத், ஹிசார், ரோஹ்தக், கர்னல், யமுனா நகர், குருகிராம், மானேசர் ஆகிய 7 மாநகராட்சிகளுக்கு, கடந்த 2ல் மேயர் தேர்தல் நடந்தது.
அதே நாளில், அம்பாலா மற்றும் சோனிபட் மாநகராட்சிகளில், மேயர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. தொடர்ந்து, பானிபட் மாநகராட்சி தேர்தல், 9-ல் நடந்தது.
இந்த தேர்தலில் மொத்தம், 41 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதில் 26 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில், 10 மாநகராட்சிகளில், பரிசாபாத், ஹிசார், குருகிராம், யமுனா நகர், கர்னல் உள்ளிட்ட ஒன்பது மாநகராட்சிகளில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.
காங்., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபேந்திர ஹூடாவின் கோட்டையாகக் கருதப்படும் ரோஹ்தக்கையும் பா.ஜ., கைப்பற்றி உள்ளது.
மானேசர் மாநகராட்சியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பா.ஜ., அதிருப்தி நிர்வாகி டாக்டர் இந்தர்ஜித் யாதவ் வென்றார். 10 மேயர் பதவிக்கான இடங்களில், ஒரு இடத்தைக் கூட காங்., கைப்பற்றவில்லை.
ஹரியானாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்தது. தற்போது, உள்ளாட்சி தேர்தலிலும் அக்கட்சி படுதோல்வி அடைந்து, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.