ADDED : ஆக 22, 2024 04:20 AM

கொப்பால்: கொப்பால் நகராட்சி துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் ஆதரவுடன் பா.ஜ., பெண் கவுன்சிலர் வெற்றி பெற்றார்.
கொப்பால் நகராட்சியில் மொத்தம் 31 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் இருவர் ராஜினாமா செய்து விட்டனர். தற்போது காங்கிரசுக்கு 15; பா.ஜ.,வுக்கு 9; ம.ஜ.த.,வுக்கு 2; சுயேச்சை 3 என, 29 பேர் உள்ளனர்.
நகராட்சிக்கு புதிய தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுக்க, ஆகஸ்ட் 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, கொப்பால் கலெக்டர் நளின் அதுல் அறிவித்திருந்தார்.
தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரசுக்கு போதிய கவுன்சிலர்கள் இருப்பதால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி சார்பில், தலைவர் பதவிக்கு வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.
தலைவர் பதவியை கொப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னாலின் ஆதரவாளரான, அம்ஜத் படேலுக்கு வழங்க முன்கூட்டியே முடிவு எடுக்கப்பட்டது.
அதே நேரம், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.பி., சங்கண்ணா கரடி, துணை தலைவர் பதவியை பா.ஜ.,வில் உள்ள தனது ஆதரவு பெண் கவுன்சிலர் அஸ்வினிக்கு வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார். இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனாலும் நேற்று நடந்த தேர்தலில், பா.ஜ., போட்டி வேட்பாளரை அறிவித்தது. அஸ்வினி உட்பட பா.ஜ.,வின் மூன்று கவுன்சிலர்கள், கட்சி மாறி ஓட்டு போட்டனர்.
காங்கிரஸ் கவுன்சிலர்களும் ஆதரித்ததால், துணை தலைவராக அஸ்வினி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சி உத்தரவை மீறி செயல்பட்ட அஸ்வினி மீது நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தயாராகி வருகிறது.