சென்னபட்டணாவில் களமிறங்க பா.ஜ., யோகேஸ்வர் விருப்பம்
சென்னபட்டணாவில் களமிறங்க பா.ஜ., யோகேஸ்வர் விருப்பம்
ADDED : ஜூன் 21, 2024 05:53 AM

ராம்நகர்: ''சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில், துணை முதல்வர் சிவகுமார் போட்டியிடுவதை, நான் வரவேற்கிறேன்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னபட்டணா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக வரும் சிவகுமாரை வரவேற்கிறேன். இந்த தொகுதிக்கு வந்து அவர் போட்டியிடட்டும். இதற்கு முன், சென்னபட்டணாவின் சாத்தனுார் தொகுதியில் போட்டியிட்டார். சென்னபட்டணாவை கனகபுராவுடன் ஒப்பிடுகிறார். கனகபுரா மாடல் என்றால் என்ன; அடக்குமுறை, கொலை, கொள்ளையா.
அச்சம்
நாங்களோ, குமாரசாமியோ எதிர்க்கட்சி தலைவர்கள் மீது, சென்னபட்டணா போலீஸ் நிலையத்தில், புகார் செய்யவில்லை.
டி.கே.பிரதர்ஸ் அதை செய்துள்ளனர். சென்னபட்டணா மக்கள், பொருளாதார ரீதியில் வலுவாக உள்ளனர்.
சிவகுமார் சென்னபட்டணாவுக்கு வந்த போது, நடந்து கொண்ட விதம் எனக்கு அச்சமளித்தது. கூட்டம் நடந்த போது ஊடகத்தினரை, வெளியே நிறுத்தி உள்ளனர். இது, தனிப்பட்ட நிகழ்ச்சியா.
நானும், குமாரசாமியும் அதிகாரிகளை அடக்கி ஆண்டது இல்லை. தன் தம்பி சுரேஷ் தோற்றதால், சிவகுமார் விரக்தியில் உள்ளார். சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலை நடத்த, குறுக்கு வழியில் முயற்சிக்கிறார். அவர் இங்கு போட்டியிடுவதை, நான் வரவேற்கிறேன்.
இடைத்தேர்தலில், நான் சீட் எதிர்பார்க்கவில்லை. கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதை ஏற்பேன். குமாரசாமியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். இந்த விஷயத்தில் அவரது முடிவு, மிகவும் முக்கியமானது.
தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை, சுரேஷ் ஒப்பு கொண்டுள்ளார். எனவே சிவகுமாரே களமிறங்க முடிவு செய்துள்ளார்.
சிவகுமார் முதல்வர்
சிவகுமார் முதல்வராக வேண்டும் என்றால், சென்னபட்டணாவில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. சித்தராமையாவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் முடிவு செய்தால், சிவகுமார் இப்போதும் முதல்வர் ஆகலாம்.
இவரது அரசியல் அத்தியாயம், சென்னபட்டணாவிலும் முடியக்கூடும். பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்களை ஒருங்கிணைப்பது, ஓரளவு கஷ்டமாக இருந்தது. லோக்சபா தேர்தல் இடைத்தேர்தல் வெவ்வேறு விதமானது. சென்னபட்டணாவில் எப்போதும் முக்கிய தலைவர்களே போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் சிவகுமார் போட்டியிடட்டும். நான் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருப்பேன். கட்சி மேலிடம் உத்தரவிட்டால், களமிறங்குவேன்.
ம.ஜ.த., வேட்பாளர் போட்டியிட்டாலும், டாக்டர் மஞ்சுநாத்தின் வெற்றிக்காக பணியாற்றியதை போன்று, பணியாற்றுவேன். அடுத்த வாரம் பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.