ADDED : மே 08, 2024 01:01 AM

புதுடில்லி:தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களின்படி, டில்லி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே பணக்காரர் என்ற பெருமை போஜ்புரி பாடகரான பா.ஜ.,வின் மனோஜ் திவாரிக்கு கிடைத்துள்ளது.
டில்லியில் மொத்தம் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 25ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ., தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசிநாள். மொத்தம் 269 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசிநாள். தங்கள் வருமானம், சொத்து விபரங்கள் குறித்து தேர்தல் கமிஷனில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களின்படி, வடகிழக்கு டில்லி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பிரபல போஜ்புரி பாடகரும் எம்.பி.,யுமான மனோஜ் திவாரி தான் மிகப்பெரிய பணக்காரர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடும் தனக்கு 28.05 கோடி ரூபாய் மதிப்பு சொத்து இருப்பதாக திவாரி, 53, தெரிவித்துள்ளார். 2022-23 ஆண்டு தாக்கல் செய்த வருமான வரித் துறை அறிக்கையின்படி, இவர் ஆண்டு வருமானம் 46.25 லட்ச ரூபாய்.
பணக்கார வேட்பாளர் பட்டியலில் தெற்கு டில்லியைச் சேர்ந்த பா.ஜ., வேட்பாளர் ராம்வீர் சிங் பிதுரி, 71, இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு 21.08 கோடி சொத்துக்கள் உள்ளன. பிதுரியின் ஆண்டு வருமானம் 14.93 லட்ச ரூபாய்.
மூன்றாவது இடத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மேற்கு டில்லி வேட்பாளர் மகாபல் மிஸ்ரா, 69, இருக்கிறார்.
இவருக்கு 19.93 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் மகளான வழக்கறிஞர் பன்சூரி ஸ்வராஜ், 40, தனக்கு 19 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இவருக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
கடந்த 2022-23 ஆண்டு தாக்கல் செய்த வருமான வரித் துறை அறிக்கையின்படி, இவர் ஆண்டு வருமானம் 68.28 லட்ச ரூபாய்.
தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆனந்த் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 17.87 கோடி ரூபாய்.
தன்னுடைய சொத்து மதிப்பு 10.65 லட்ச ரூபாய் என, வடகிழக்கு டில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் அறிவித்துள்ளார்.

