ரேபரேலியில் பிரியங்காவுக்கு எதிராக போட்டியிட பா.ஜ.,வின் வருண் மறுப்பு
ரேபரேலியில் பிரியங்காவுக்கு எதிராக போட்டியிட பா.ஜ.,வின் வருண் மறுப்பு
ADDED : ஏப் 27, 2024 01:07 AM

புதுடில்லி,
உத்தர பிரதேசத்தில், காங்., கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும்படி, பா.ஜ., மேலிடம் வழங்கிய வாய்ப்பை, வருண் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உ.பி.,யில் உள்ள ரேபரேலி லோக்சபா தொகுதி காங்கிரசின் கோட்டை. இத்தொகுதி எம்.பி.,யாக இருந்தவர் சோனியா. தற்போது அவர், ராஜ்ய சபாவுக்கு தேர்வாகி உள்ளார்.
இந்த தொகுதியில் சோனியாவின் மகளும், ராகுலின் சகோதரியும், காங்., பொதுச்செயலருமான பிரியங்காவை களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, காங்., இதுவரை அறிவிக்கவில்லை.
சோனியா உறவினரான, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா, பா.ஜ., சார்பில், சுல்தான்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இவரது மகன் வருண், பிலிபிட் தொகுதியின் தற்போதைய பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார்.
எனினும் இந்த முறை, இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வருணுக்கு பா.ஜ., வாய்ப்பு வழங்கவில்லை.
இத்தொகுதியில் அவருக்கு பதிலாக, ஜிதின் பிரசாத் களமிறக்கப்பட்டு உள்ளார். இதனால், வருண் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், ரேபரேலி தொகுதியில் போட்டியிட, வருணுக்கு பா.ஜ., மேலிடம் வாய்ப்பு வழங்கியதாகவும், சிந்தித்து முடிவெடுக்கும்படி அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
ஒரு வாரம் தீவிரமாக பரிசீலித்து வந்த வருண், ரேபரேலி தொகுதியில் போட்டியிட மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ராகுல் மற்றும் பிரியங்காவின் சகோதரரான வருண், தன் சகோதரி பிரியங்காவை எதிர்த்து போட்டியிட விரும்பாததால், பா.ஜ., மேலிடத்தின் வாய்ப்பை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
சோனியாவின் கணவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜிவின் இளைய சகோதரர் சஞ்சய். இவரது மனைவி தான், மேனகா.
சஞ்சய் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின், அவரது தாயும், முன்னாள் பிரதமருமான இந்திராவுடன் ஏற்பட்ட மோதலால், வீட்டை விட்டு வெளியேறிய மேனகா, தன் மகன் வருணுடன் தனியாக வசித்து வந்தார்.
சோனியாவுக்கும், மேனகாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால், இருவரும் பேசிக்கொள்வது இல்லை. அதேநேரத்தில், வருண், ராகுல், பிரியங்கா இடையே சுமுகமான சகோதர உறவு உள்ளது.

