துறைமுகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு; படகுகளில் கருப்பு கொடி போராட்டம்
துறைமுகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு; படகுகளில் கருப்பு கொடி போராட்டம்
ADDED : மார் 13, 2025 12:18 AM

கார்வார்: கார்வார் அருகே துறைமுகம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கருப்பு கொடி கட்டிய படகுகளை நடுக்கடலில் நிறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவின், கார்வார் தாலுகா அங்கோலா அருகே உள்ளது கேனி கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் வணிக நோக்கங்களுக்காக தனியார் இரும்பு நிறுவனம் ஒன்று, கேனி கிராமத்தில் துறைமுகம் அமைக்க முடிவு செய்தது. இதற்காக அந்த நிறுவனம், கர்நாடக அரசின் துறைமுக துறைக்கு உட்பட்ட கடல்சார் வாரியம் இடையில் 4,119 கோடி ரூபாய்க்கு, 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
'இங்கு துறைமுகம் அமைந்தால், பல்லாரியில் உள்ள ஜிண்டால் இரும்பு தொழிற்சாலைக்கு எளிதாக இரும்புகளை கொண்டு செல்ல முடியும். வேலை வாய்ப்பு உருவாகும்' என, தனியார் நிறுவனம் கூறி இருந்தது.
ஆனால், 'துறைமுகம் அமைந்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; துறைமுகம் அருகில் எங்களை மீன்பிடிக்க விடமாட்டார்கள்' என, மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 24ம் தேதி, துறைமுகம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலில் மூழ்கி 3 பெண்கள் தற்கொலைக்கும் முயன்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
மீனவர்கள் சங்க பிரதி நிதிகளுடன், மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க துறைமுகத்திற்கு, நில அளவீடு செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று நில அளவீடு பணி மீண்டும் துவங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் கடற்கரையில் போராட்டம் நடத்தினர்.
பின், படகுகளை கடலுக்குள் இறங்கினர். கருப்பு கொடிகளை கட்டி, நடுக்கடலுக்கு சென்று போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி கரைக்கு வர வைத்தனர்.
போராட்டம் தீவிரம் அடைவதை தடுக்கும் வகையில், வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது.
இதனால் கேனி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.