குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு
குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு
ADDED : மார் 31, 2024 11:03 PM
பெங்களூரு: 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு இருந்தது, தெரியவந்து உள்ளது.
பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் கடந்த மாதம் 1 ம் தேதி, குண்டுவெடித்தது. ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். ஷிவமொகாவின் முஸவீர் உசைன் ஷாகிப், அப்துல் மாத்ரின் தாஹா குண்டுவெடிப்பு நிகழ்த்தியது தெரிந்தது. இவர்களுக்கு உதவியாக இருந்த முஜாமில் ஷெரிப் என்பவர், கடந்த மாதம் 26 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருடன், முஜாமிலுக்கு தொடர்பு இருந்தது, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிந்து உள்ளது.
கடந்த ஆறு மாதமாக முஜாமிலும், அவரது தாயும் சிக்கமகளூரு டவுன் அய்யப்ப நகரில், வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் கூறியதால், முஜாமிலுக்கு அந்த வீட்டை வாடகைக்கு, உரிமையாளர் கொடுத்து உள்ளார். குண்டுவெடிப்பு நடந்த 20 நாட்களுக்கு முன்பு, முஜாமில் பெங்களூரு சென்று விட்டார். அவர் கைதான பின்னர், வீட்டை பூட்டிவிட்டு அவரது தாய் தலைமறைவானதும் தெரிய வந்து உள்ளது.

